சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. வானில் தினமும் நூற்றுக்கணக்கான அற்புதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பெரும்பாலானவை நமது கண்ணுக்கு புலப்படாத அதிசயங்கள் ஆகும். ஆனாலும் மனிதனின் கண்கள் எப்போதும் வானை நோக்கியதாகவே இருக்கும். அங்கிருந்து எப்போது என்ன வரும் என்று தேடிக்கொண்டே இருந்து மக்களை எச்சரிப்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் வேலை. நாம் வாழும் இந்த கேலக்ஸி பல ஆச்சரியங்களைக் கொண்டது. நமது பூமியைப் போலவே இந்த பிரபஞ்சத்தில் பல கோள்கள் இருக்கும் என்றே நம்பப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் ஸ்பான்சர் செய்யப்படும் வானியலாளர்கள் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.


விமானம் அளவுள்ள மூன்று பெரிய ஆஸ்டிராய்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பூமியின் அருகே கடந்து சென்றது. இந்தச் சூழலில் வரும் நாட்களில் மற்றொரு ஆபத்தான ஆஸ்டிராய்டு பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா வானியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த கோள் 26,300 மைல் வேகத்தில் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆஸ்ட்ராய்டு இந்திய நேரப்படி  மார்ச் 4ஆம் தேதி, மதியம் 1.30 மணி அளவில் பூமியை நெருங்கும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய கொள் சூரியனை 384 நாட்களுக்குள் சுற்றி முடிகிறது. இந்த ஆஸ்டிராய்டு அதன் பாதையில் ஒரு சிறிய அளவில் விலகினாலும் கூட டைனோசர்களைப் போல நம்மை வரலாறாக மாற்றிவிடக்கூடும் என நாசா எச்சரித்துள்ளது. வரும் 2046-இல் மற்றொரு ஆஸ்டிராய்டு 1.01 மில்லியன் மைல்கள் வரை நெருங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். ஆனால், இவை பெரும்பாலும் பூமியின் மீது மோதுவதில்லை. இத்தகைய பிரமாண்ட ஆஸ்டிராய்டுகள் பூமியைத் தாக்குவது 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அபூர்வ நிகழ்வாகும். இதுபோன்ற ஆஸ்டிராய்டுகளின் மூவ்மென்ட்டுகளை அமெரிக்கா உட்பட பல்வேறு உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



பூமியில் இருந்து ஒப்பீட்டளவில் குறைவான தூரத்தில், 20 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியை ஒட்டி செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. அதாவது இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவைவிட ஐந்து மடங்கு அதிகமாகும். இது பூமிக்கு மிகவும் அருகில் வந்தாலும் மனித இனத்தையே அழிக்கும் தாக்குதல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். தற்போது வரை பெரிய ஆஸ்டிராய்டுகள் பூமியின் மீது மோதும் ஆபத்து இல்லை என்றாலும் கூட வரும் காலத்தில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளதா என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.