டிஜிட்டலின் அடுத்தடுத்த வளர்ச்சி ஒரு கட்டத்தில் பயன்படுத்தும் நம்மையே அச்சுறுத்த தொடங்கிவிட்டது. மனிதர்களை விட வலுவான ரோபோவை உருவாக்குவது ஆய்வாளர்களுக்கு பெரிய விஷயமல்ல. ஆனால் அந்த ரோபோவே நம்மை எதிர்க்கத் தொடங்கிவிட்டால் என்ன செய்வதென்ற பயமே அந்தக்கட்டம் வரை செல்லாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. நாம் உருவாக்கும் ஒரு டிஜிட்டல் தயாரிப்பு நம்மையே எதிர்க்கலாம் என்பதும் அல்லது நாம் எதிர்பார்க்காத ஒரு சிக்கலுக்குள் நம்மை கொண்டு செல்லலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியான ஒரு ஆபத்தை தற்போது கண்முன்னே காட்டத் தொடங்கி இருக்கிறது பேஸ்புக் ஓனர் மார்க்கின் கனவுத்திட்டமான மெட்டாவெர்ஸ். தமிழில் இதனை மெய்நிகர் உலகம் என்கிறோம். 


டிஜிட்டல் உலகை பின் தொடரும் நபர்களுக்கு மெட்டாவெர்ஸ் புதிதல்ல. ஆனால் வெகு விரைவில் இது உலகையே ஆளப்போகும் ஒரு தொழில் நுட்பம். அதேவேளையில் ஆபத்தும் அதிகம். 




அது என்ன மெட்டாவெர்ஸ்?


சமீபத்தில் மெட்டாவெர்ஸ் திருமணம் ஒன்றை பரபரப்பாக இணைய உலகம் பேசியது நினைவிருக்கலாம். மணமகனும், மணமகளும் வீட்டுக்குள் இருந்தாலும் அவர்களின் திருமணம் டிஜிட்டலாக, அவதார் உருவாக நடந்தேறியது. அந்த திருமண விழாவில் நண்பர்களும் கலந்துகொண்டனர். ஆனால் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்தனர். புரியவில்லையே என்று நீங்கள் நினைத்தால் இன்னும் விளக்கமாக பார்க்கலாம்.


மெட்டாவெர்ஸ் என்பது நிஜ உலகத்தில் இருந்து விடுபட்டு டிஜிட்டல் உலகத்துக்குள் போவது. விர்ஜுவல் ரியாலிட்டி கண்ணாடியை மாட்டினால் நீங்கள் துப்பாக்கி சுடலாம், வானில் பறக்கலாம், மலையில் இருந்து குதிக்கலாம். உங்கள் கண் வழியாக  நாம் நினைக்கும் காட்சி மூளைக்கு பதிவாகி அது நிஜத்தில் நடப்பது போலவே இருக்கும். நீங்கள் தரையில் நின்றுகொண்டு ஒற்றை கயிற்றில் நடப்பது போல விர்ஜுவல் ரியாலிட்டியில் நடந்தீர்கள் என்றால் தரையில் நிற்கிறோம் என்பதை மறந்து தானாகவே கயிற்றில் நடப்பதைப் போல பதைபதைத்து விடுவீர்கள். அந்த அளவுக்கு  அது நிழலை நிஜமாக உங்கள் கண் முன்னால் காட்டும். ஆனால் மெட்டாவெர்ஸ் என்பது இன்னும் நிஜமாக இருக்கும். உங்களின் உருவமே ஒரு அவதார் உருவமாக இருக்கும். நீங்கள் வீட்டுக்குள் இருந்தாலும் பார்க்கில் நடக்கலாம். நண்பர்களை சந்திக்கலாம். பேசலாம், விளையாடலாம், நீச்சல் அடிக்கலாம். இப்படியான உலகத்துக்குள் நீங்கள் சென்றால் இன்செப்சன் படம் போல நீங்கள் நிஜத்தில் இருக்கிறீர்களா அல்லது டிஜிட்டல் உலகில் இருக்கிறீர்களா என்ற சந்தேகம் கூட வரலாம். இதுதான் மெட்டாவெர்ஸ்.




மார்க்...


பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என்று மார்க் மாற்றியதன் முக்கிய காரணமே மெட்டாவெர்ஸ் உலகத்தை கணக்கில் கொண்டுதான். அடுத்த திட்டம் இதுதான் என டிஜிட்டல் உலகத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளார் மார்க். மெட்டாவெர்ஸ் அறிமுகத்தின் போது 'இந்த டிஜிட்டல் உலகத்தின் மூலம் நீங்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கத்திச்சண்டை வீராங்கனையுடன் வீட்டில் இருந்தபடியே கத்திச்சண்டை செய்யலாம் என கையில் கத்தியுடன் நின்றார் மார்க்.




தொடங்கியது சிக்கல்...


ஐ.. சூப்பர் என இந்த டிஜிட்டல் உலகம் நினைக்கவைத்தாலும் இதன் மறுபக்கம் அச்சமூட்டத் தொடங்கியுள்ளது. பெண் ஒருவரின் குற்றச்சாட்டுதான் மார்க்கையே மண்டை பிய்த்துக்கொள்ள வைத்துள்ளது. மெட்டாவெர்ஸ் உலகத்தில் நான் என்னை அவதாராக உருவாக்கி சென்றேன். ஆனால் ஒரே நிமிடத்துக்குள் 4 ஆண்கள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். பாலியல் வன்கொடுமை செய்தார்கள். என்னை புகைப்படமும் எடுத்து வைத்துக்கொண்டனர் என புகாரளித்துள்ளார். நினைவில் கொள்ளுங்கள். இது அனைத்துமே டிஜிட்டல் உலகத்தில்தான்.


ஆனால் ரியாலிட்டியை பிரதிபலிக்கும் டிஜிட்டல் உலகத்தில் பாலியல் வன்கொடுமை என்பதும் மன ரீதியிலான சிக்கல்தானே. அதனால்தான் அந்த பெண்ணில் புகாரை தற்போது சைபர் குற்றப்பிரிவு வரை சென்றுள்ளது. தொட்டால் தொடுவதுபோல உணர்வுகளை கொடுக்கும் டிஜிட்டல் உலகில் பாலியல் வன்கொடுமை என்பது நிச்சயம் தவிர்க்கமுடியாத குற்றச்சாட்டு இல்லை என பேசத் தொடங்கியுள்ளது டிஜிட்டல் உலகம்.


ரஜினி நடித்த எந்திரன் படத்தில் 'இனிமேதான் கதையே ஆரம்பம்' என வில்லன் சொல்வதுபோல இந்த டிஜிட்டல் உலகம்தான் அடுத்தகட்ட புதுக்கதையை உருவாக்க போகுதோ என கண்ணில் மிரட்சியுடன் இருக்கின்றனர் டிஜிட்டல் உலகவாசிகள்.