சிங்கப்பூரில் சாலை விபத்தில் சிக்கிய 24 வயது இளைஞரின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றியிருக்கிறது அவர் கையில் அணிந்திருந்த அவரது ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச். சிங்கப்பூரில் வெளிவரும் `மதர்ஷிப்’ என்ற செய்தி நிறுவனம் கடந்த வாரம் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. 


கடந்த செப்டம்பர் 25 அன்று, சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 24 வயது முகமது ஃபித்ரியை ஆள் அரவமற்ற ஆங் மோ கியா என்ற பகுதியில் வேன் ஒன்று இடித்துவிட்டுச் சென்றது. யாரும் உதவிக்கு இல்லாமல், பலத்த காயத்துடன் சாலையில் விழுந்துள்ளார் முகமது ஃபித்ரி. அவர் தனது கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 என்ற ஸ்மார்ட் வாட்சில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் அதனை அணிந்திருப்பவர்கள் கீழே விழுந்தால் அதனைக் கண்டறிவதுடன், அணிந்திருப்பவருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தால் அவரின் எமர்ஜென்சி தொடர்புகளுக்கும், அருகிலுள்ள எமர்ஜென்சி சர்வீஸ்களுக்கும் தகவல் அனுப்பும் வசதி கொண்டது. வாட்ச் அணிந்திருப்பவர் கீழே விழுந்தால், அது காட்டும் அலெர்டுக்குப் பதில் அளித்தால் வாட்ச் எந்தத் தகவலையும் அனுப்பாது. பதில் அளிக்கவில்லை எனில் எமர்ஜென்சி மோடில் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணிகளைச் செய்து, உதவிகளை அழைக்கும். 



முகமது ஃபித்ரி வேன் இடித்து, கீழே விழுந்ததைக் கண்டுபிடித்த அவரது ஸ்மார்ட்வாட்ச் அவரது பதிலுக்காக காத்துக் கொண்டிருந்து, அவர் பதில் எதுவும் தரவில்லை என்பதால் தக்க சமயத்தில் எமர்ஜென்சி சர்வீஸ்களைத் தொடர்புகொண்டுள்ளது. உடனே மருத்துவ உதவி அவர் இருந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் பாதிக்கப்பட்ட நபர். சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், இரவு சுமார் 8.20 மணிக்கு அவர்களுக்குத் தகவல் வந்ததாகவும், அருகில் இருந்த கூ டேக் புவாட் மருத்துவமனைக்கு முகமது ஃபித்ரி சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 


இதே ஆண்டு, கடந்த ஜூன் மாதன் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் மயங்கி விழுந்த 78 வயது முதியவர் தனது ஸ்மார்ட்வாட்ச் காட்டிய அலெர்டிற்குப் பதிலளிக்காததால், அவரது ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் 60 நொடிகளுக்குப் பிறகு உதவிக்குக் கோரியது. கடந்த ஜூலை மாதம், 25 வயது நபர் ஒருவருக்காக உதவி கோரிய ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் காரணமாக, சரியான நேரத்தில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு, அவரது மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 என்ற ஸ்மார்ட்வாட்ச்சில் சேர்க்கப்பட்டுள்ள fall detection சிறப்பம்சம், பயோமெட்ரிக் முறையில் இதயத் துடிப்பு. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, நகர்வு, உடல் ஆரோக்கியம் முதலானவற்றைக் கண்காணித்து, பயன்படுத்துபவருக்கு உதவும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.