ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் ஃபோன் என்று தான் எல்லாம் ஆரம்பித்தது. அதன் பின்னர் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஏசி, ஸ்மார்ட் வாட்ச் என்றாகி ஒரு ஒட்டுமொத்த வீட்டையும் கூட தொழில்நுட்பத்தின் கூடாரமாக்கும் ஸ்மார்ட் ஹோம் வரை வந்துவிட்டது. விட்டலாச்சார்யா படம் போல் கைதட்டினால் விளக்கு எரியும், கைநீட்டினால் குழாயில் தண்ணீர் வரும், முன்னாள் சென்றாலே கதவு தானாக திறக்கம். சூ மந்திரக்காளி எல்லாம் சொல்லவே தேவையில்லை என்றாகிவிட்டது உலகம்.
இந்நிலையில் ஐ ஃபோன் புகழ் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது.
காரணம் பெரும்பாலான உடல் உபாதைகள் சரியாக தண்ணீர் குடிக்காததாலேயே வந்துவிடுகிறது.
இந்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை வாங்கி வைத்துக் கொண்டால் அது நம் உடலின் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்க வேண்டிய இடத்தில் அலர்ட் கொடுத்து குடிக்க வைக்குமாம். ஹைட்ரேட் ஸ்பார்க் HidrateSpark என்ற இந்த தண்ணீர் பாட்டில்கள் இரு மாடல்களில் வருகின்றன. HidrateSpark Pro மற்றும் HidrateSpark Pro STEEL என்று வருகின்றன. முதலாவது பாட்டிலின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 4594. இரண்டாவது பாட்டிலின் விலை ரூ,6126. ஆனாலும் இது இன்னும் இந்திய சந்தைக்கு வரவில்லை.
ஆனால் அமெரிக்க சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாம். நம்மூரில் அறிமுகப்படுத்தினால் நவீன மூட்டைப் பூச்சி கொல்லும் இயந்திரம் என்று கிண்டல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. தாகம் எடுத்தால் தண்ணீர். வெயில் காலம் என்றால் தாகம் எடுக்காவிட்டாலும் கூட தண்ணீர் என்றே சிறு வயதிலிருந்து பழக்கப்பட்டிருக்கிறோம். அதனால், இந்தியர்கள் இயற்கையாகவே ஸ்மார்ட் தான்.
ஒரு காலத்தில் கிணறு அல்லது தெருக்குழாய்களில் தண்ணீர் குடித்ததெல்லாம் மாறிவிட்டது. இன்றைக்கு கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்றாகிவிட்டது. சுத்தமான குடிநீர் என்பதே அரிதாகிபோனது. மினரல் வாட்டர் குடிப்பது நல்லதா? குழாய் நீரை காய்ச்சி குடிப்பது நல்லதா? போன்ற பல பல கேள்விகள் நம்மிடம் இருக்கும். அதுவும் கோடை தொடங்கிவிட்டாலே பெரும்பாலான வீடுகளின் ஃபிரிட்ஜில் தண்ணீர் பாட்டில்கள் நிரம்பிவிடும். ஐஸ் வாட்டர் குடிக்கலாமா? கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பல கேள்விகள் நமக்கு தண்ணீர் சார்ந்து எழுகின்றது.
மனித உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை தண்ணீரால் ஆனது. இதனால் ஒருவருக்கு தேவைப்படும் நீரின் அளவு என்பது அவருடைய உடல், வாழும் இடம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை பொறுத்தது. ஒருவரின் உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரில் அளவை கணக்கிடலாம். தினமும் காலையில் எழுந்தவுடன், தண்ணீர் குடிப்பது உடல்நலனிற்கு நல்லது. இதை தொடர்ந்து பின்பற்றிவந்தால், உடலுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்கலாம். உணவு சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ளமல், அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் சராசியாக ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிப்பது நலம்.