இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தில் படைப்புகளுக்கு கிடைக்கும் வரவேற்பை கண்டு பெருமை அடைவதாக அதன்  தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதுமே ஆப்பிள் தயாரிப்புகளுக்கு ஏகப்பட்ட மவுசு உண்டு. ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் பாதுகாப்பாகவும் , நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதுதான் பயனாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய நம்பிக்கை. மேலும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அதனை வைத்திருப்பது கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் பிரியர்கள் ஏராளம். பலரும் ஐபோன் , ஐபேட் உள்ளிட்ட ஆப்பிள் தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில்  ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ”ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய வருவாய் சாதனையைப் படைத்துள்ளது. மேலும்  இந்தியாவில் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியுடன் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் இந்திய சந்தையில் சீரான வளர்ச்சியை பெற்று வருகிறது. அதே போல இந்தியாவில் ஐபோன் பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நன்றி என  டிம் குக்  தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ஆப்பிள் கடந்த மாதம் இந்தியாவில் புதிய ஐபோன் 14 இன் உற்பத்தியை துவக்கியது. புதிய ஐபோன் 14 வரிசை புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியமான பாதுகாப்பு திறன்களை அறிமுகப்படுத்துகிறது. ஐபோன் 14 ஐ இந்தியாவில் தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று ஆப்பிள் தெரிவித்திருந்தது. 


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவான ஐபோன் 14 சீரிஸ் இந்தியாவில் அதிக அளவு விற்பனையாகிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 10 சதவிகிதம் அதிகரித்து 42.6 பில்லியன் டாலராக உள்ளது. இரண்டாவது காலாண்டில் 1.7மில்லியன் ஐபோன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.தொழில்நுட்ப தயாரிப்புகளின் உள்ளூர் உற்பத்தியை இந்தியா இரட்டிப்பாக்குவதால், ஆப்பிள் தனது புதிய ஐபோன் 14 உற்பத்தியில் 5 சதவீதத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவிற்கு மாற்றும் என்றும், 2025 ஆம் ஆண்டில் 25 சதவிதமாக மாற்றும் என்றும் தெரிகிறது.




Counterpoint India ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தருண் பதக் ”ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்தடுத்த படைப்புகளை விரிவுப்படுத்த இதுதான் சரியான காலம். ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு இந்தியாவில் மவுசு இருந்தாலும் ஆப்பிள் தயாரிப்புகளை இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுகின்றன" என்றார். ஆய்வாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த Apple CFO, "இந்தியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, வியட்நாம் மற்றும் பல இடங்களில் நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாகச் செயல்பட்ட இடங்களில் மிகவும் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியைக் காண்கிறோம்" என்று கூறினார்.


ஆப்பிள் செப்டம்பர் காலாண்டில் உலகளவில் $90.1 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இது ஆண்டுக்கு 8 சதவீதம் அதிகமாகும். ஆண்டு வருவாய் $394.3 பில்லியனாக இருந்தது. மேலும் இதுவும் ஆண்டுக்கு 8 சதவீதம் அதிகமாகும்.