தொழில்நுட்ப சாதனங்களுக்கு பெயர் போன ஆப்பிள் நிறுவனம், வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களில் ஆப்பிள் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.


மக்கள் விரும்பும் ஆப்பிள்:


உலகளவில் தரமான தொழில்நுட்ப சாதனங்கள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது ஆப்பிள் நிறுவனம் தான். அந்நிறுவனத்தின் சாதனங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் உயர்தொழில்நுட்ப அம்சங்கள் தான், பயனாளர்கள் ஆப்பிள் சாதனங்களை அதிகம் விரும்பி வாங்க முக்கிய காரணம் என்றும் கூறலாம். தரமான கணினிகளை உருவாக்குவதை இலக்காக கொண்டு 1976ம் ஆண்டு உருவான ஆப்பிள் நிறுவனம், காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொண்டே வந்தது. அதன் காரணமாக தான் தற்போது, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஆப்பிள் ஐபோன், ஐபேட், ஐபாட் மற்றும் இயர்பேட் என பல்வேறு சாதனங்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவிலும் லட்சக்கணக்கானோர் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். 


இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள்:


ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் கிடைத்தாலும், அவை எதுவுமே அந்நிறுவனத்தால் நேரடியாக இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.  ஆப்பிள் தனது முதல் ஆன்லைன் சில்லறை விற்பனையை 2020 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், ஆப்பிள் நிறுவனத்திற்கு இருந்த ஒழுங்குமுறை தடைகள் காரணமாக, இந்தியாவில் நேரடி விற்பனை நிலையங்கள் தொடங்கப்படாமலேயே இருந்தன. இதனால், க்ரோமா போன்ற பல்வேறு சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக தான், இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இறக்குமதி வரி மற்றும் விற்பனையாளர்களின் லாபம் ஆகியவை சேரவே, மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களின் விலை சற்றே அதிகமாக உள்ளது.  இந்நிலையில் தான், முதல் முறையாக இந்தியாவில் இரண்டு நேரடி விற்பனை நிலையங்களை அமைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


ஆப்பிள் விற்பனை நிலையங்கள்:


முதற்கட்டமாக இந்தியாவில் இரண்டு சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று டெல்லியிலும் அமைக்கப்பட உள்ளது. மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் வணிக வளாகத்தில் அமைய உள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் சில்லறை விற்பனை நிலையம் வரும் 18ம் தேதி காலை 11 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதைதொடர்ந்து, 20ம் தேதியன்று டெல்லியில் மற்றொரு விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளது. சாகெட் பகுதியில் உள்ள சிட்டிவாக் வணிக வளாகத்தில் தான் இந்த விற்பனை நிலையம் அமைய உள்ளது.


சாதகங்கள் என்ன?


விற்பனை நிலையங்களை திறப்பதன் மூலம், ஆப்பிள் சாதனங்களுக்கான சர்வீஸ் உள்ளிட்டவற்றை பயனாளர்கள் நேரடியாக பெறலாம். அதோடு அந்த நிறுவனத்தின் அண்மைகால வெளியீடுகளான iPhone 14, iPad, AirPod, MacBooks, Apple Watches, HomePods மற்றும் Apple தொலைக்காட்சி என அனைத்து சாதனங்களும் கிடைக்கும். அதோடு, ஆப்பிள் சாதனங்களின் விலையும், அந்த குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் கணிசமாக குறையும் என என எதிர்பார்க்கப்படுகிறது.