ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள `மேக் ஸ்டூடியோ’ என்ற டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இதுவரை வெளிவந்துள்ள மாடல்களிலேயே மிகச் சிறந்ததாகவும், ஆற்றல் மிக்கதாகவும் கருதப்படுகிறது. கடந்த மார்ச் 8  அன்று நடைபெற்ற பீக் பெர்ஃபாமன்ஸ் ஈவெண்டில் `மேக் ஸ்டூடியோ’ என்ற கணினியை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். M1 Max, M1 Ultra முதலான பிராசஸர்கள் பொருத்தப்பட்டுள்ள மேக் ஸ்டூடியோ அதிவேக CPU, GPU பெர்ஃபாமன்ஸ் அளிக்கப்பதோடு, பிற மேக் தயாரிப்புகளையும், பிற கணினிகளையும் விட அதிக சிறப்பம்சங்கள் கொண்டது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேக் ஸ்டூடியோ கணினியுடன் ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஸ்டூடியோ டிஸ்ப்ளே என்ற திரையையும் வெளியிட்டுள்ளது. 


ஆப்பிள் நிறுவனத்தின் `மேக் ஸ்டூடியோ’ கணினியில் என்ன ஸ்பெஷல்? விவரங்கள் இதோ... 


1. அதிக ஆற்றல்மிக்க பிராசஸர் கொண்ட கணினி


M1 Ultra - மேக் ஸ்டூடியோவில் பொருத்தப்பட்டுள்ள இந்த பிராசஸர் உலகிலேயே அதிக ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது. சுமார் 128GB அளவிலான அதிக பேண்ட்விட்த், குறைவான மெமரி ஆகியவற்றுடன் 20-core CPU, 64-core GPU, 32-core நியூரல் எஞ்சின் ஆகியவை சேர்க்கப்பட்டு, அதிக ஆற்றல் கொண்ட கணினியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 



2. அதிகளவிலான கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள்


மேக் ஸ்டூடியோ கணினியில் டிஸ்ப்ளே, பிற கேட்ஜெட்கள் முதலானவற்றை இணைக்க நான்கு Thunderbolt 4 போர்ட்கள், 10GB ஈத்தர்நெட் போர்ட், இரண்டு USB-A போர்ட், ஒரு ப்ரோ ஆடியோ ஜேக் முதலானவை சேர்க்கப்பட்டுள்ளன. 


3. ஸ்டூடியோ டிஸ்ப்ளே, மேஜிக் கீபோர்ட், ட்ராக்பேட், மவுஸ் - எல்லாமே தனித்தனியாக வாங்க வேண்டும்!


மேக் ஸ்டூடியோ கணினியுடன் பொருந்தும் ஸ்டூடியோ டிஸ்ப்ளே, சில்வர், கறுப்பு முதலான நிறங்களில் கிடைக்கும் மேஜிக் கீபோர்ட், மேஜிக் ட்ராக்பேட், மேஜிக் மவுஸ் முதலானவற்றைத் தனியாக வாங்க வேண்டும். 


4. வீடியோ தொகுப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், 3D எடிட்டர்கள் முதலான வல்லுநர்களுக்கான கணினி


ஆப்பிள் நிறுவனம், `மேக் ஸ்டூடியோ’ கணினியைப் பல்வேறு துறைகளான செயலிகளை உருவாக்குவது, போட்டோகிராஃபர்கள், இசையமைப்பாளர்கள் முதலானவற்றின் வல்லுநர்களின் அதிதீவிர பயன்பாட்டுக்காக உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 


5. ஸ்டூடியோ டிஸ்ப்ளே.. விவரங்கள் இதோ..


27-inch 5K Retina ஸ்க்ரீன் கொண்ட ஸ்டூடியோ டிஸ்ப்ளே சுமார் 14.7 மில்லியன் பிக்சல்களைக் கொண்டது. இந்த டிஸ்ப்ளேவைச் சுமார் 30 டிகிரி வரை டில்ட் செய்து பயன்படுத்தலாம். வீடியோ கால்களுக்காக இதில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. 



6. ஸ்டூடியோ டிஸ்ப்ளே.. மானிட்டரில் ஸ்பீக்கர்!


ஸ்டூடியோ டிஸ்ப்ளேவில் துல்லியமாக ஃபோன் பேசவும், வாய்ஸ் ரெக்கார்டிங் செய்யவும் மூன்று மைக்ரோஃபோன் அர்ரே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 6 ஸ்பீக்கர்கள் சேர்க்கப்பட்ட அதிநவீன ஆடியோ சிஸ்கர், 4 வூஃபர்கள், 2 அதிநவீன ட்வீட்டர்கள் முதலானவை சேர்க்கப்பட்டுள்ளதோடு, டால்பி அட்மாஸ் ஆடியோக்களும் இதில் இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 


7. எப்போது கிடைக்கும்?


மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்ப்ளே ஆகியவற்றைத் தற்போது ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் ஆர்டர் செய்யலாம். மேலும், வரும் மார்ச் 18 முதல் ஆப்பிள் ஸ்டோர்களில் இவை விற்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 


8. மேக் ஸ்டூடியோ.. விலை என்ன?


1.89 லட்சம் ரூபாய் விலையில் தொடங்குகிறது மேக் ஸ்டூடியோ. ஸ்டூடியோ டிஸ்ப்ளேவின் விலை 1.60 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மேஜிக் கீபோர்ட் விலை 19,500 ரூபாய், மேஜிக் ட்ராக்பேட் விலை 14,500 ரூபாய், மேஜிக் மவுஸ் விலை 9500 ரூபாய் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. பேசிக் மாடலின் விலை மொத்தமாக சுமார் 3.93 லட்சம் ரூபாய் எனவும், அதிகபட்ச அம்சங்களைக் கொண்ட மேக் ஸ்டூடியோவின் விலை மொத்தமாக 7.9 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.