புதிய தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சம் என எப்போதும் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தில் போன்களுக்கு என்றுமே தனி மவுசு உண்டு. மொபைல் மார்கெட்டில் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய இந்த பிராண்ட் அடுத்தடுத்து தங்களது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில் விரைவில் ஐபோன் 13 வெளியாகும் என்ற செய்தி வெளியானதில் இருந்து எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்பிள் ஈவெண்ட் வருகிற வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி (இன்று) , அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டது அந்நிறுவனம். இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 13 அறிமுக விழா நடைபெறவுள்ளது. இந்த அறிமுக விழாவில் ஐபோன் 13 மாடல்கள் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச், ஏர்பாட்ஸ் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 13 மாடல்களை பொருத்தவரை ஐபோன் 13, ஐபோன்13 புரோ, ஐபோன் 13 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி என நான்கு விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே ஐபோன் என்றாலே விலை அதிகம்தான். குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தி தொழிற்சாலைகள் இல்லை என்பதால் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. தற்போது வெளியாக உள்ள ஐபோன் 13 ஆனது விலையில் புதிய உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது.
தற்போது வெளியாக உள்ள இந்த ஐபோன் 13 இல் IOS 15 இன்பில்டாக கொடுக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த மே மாதம் நிகழ்ந்த ஈவெண்ட் ஒன்றில் ஐ.ஓ.எஸ் 15 ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த இயங்குதளத்தின் சோதனை ஓட்டம் ஒரு சில பதிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள ஐபோன் 13 அறிமுக விழாவில் ஐ.ஓ.எஸ் 15 - இன் டீசர் வெளியாகலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் பயனாளர்களையும் கூட ஃபேஸ்டைமில் இணைக்கும் வசதிகளும் அறிமுகமாகவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் பயனாளர்களுக்கு இந்த இயங்குதள அப்டேட் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மாடல் இன்று வெளியாகவுள்ளதால் உலகளவில் உள்ள ஆப்பிள் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். வரப்போகும் மாடலில் உள்ள புதிய அம்சங்கள் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஐபோன் 13 அறிமுக விழாவை கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் பக்கத்தில் காணலாம். அதற்காக கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.