10 நாட்களில் 13 பேய்ப் படங்களை தனியாக பூட்டிய அறையில் அமர்ந்து பார்த்துவிட்டால் ரூ.95,000 பரிசு என்று அறிவித்துள்ளது ஒரு ஃபைனான்ஸ் நிறுவனம். தமிழில் நயன்தாரா நடிப்பில் மாயா என்றொரு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் மையமே இதுதான். பேய்ப் படம் பார்த்தால் பணம். அப்படி ஒரு போட்டி இப்போது நிஜமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வளவுதானா இதோ கிளம்பிட்டேன் என்று வண்டிச் சாவியை தேடாதீர்கள். போட்டியை அறிவித்திருப்பது அமெரிக்காவில் உள்ள ஃபைனான்ஸ் நிறுவனம்.


ஃபைனான்ஸ் பஸ் என்ற மிகப்பெரிய ஃபைனான்ஸ் நிறுவனம் தான் இந்தப் போட்டியை அறிவித்துள்ளது. இந்நிறுவனம், 'Horror Movie Heart Rate Analyst' ஹாரர் மூவி ஹார்ட் ரேட் அனலிஸ்ட் என்று இந்தப் போட்டிக்கு பெயர் வைத்துள்ளது. அதன்படி இதுவரை உருவாக்கப்பட்ட மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் படு பயங்கர பேய்ப் படங்கள் 13 தேர்வு செய்யப்படும். போட்டியாளர் தனியாக ஓர் அறையில் அமர்ந்து இந்தப் படங்களைத் தொடர்ச்சியாக 10 மணி நேரத்துக்குள் பார்த்து முடிக்க வேண்டும். அப்போது படம் பார்க்கும் நபரின் உடலில் ஃபிட் பிட் (FitBit) இயந்திரம் பொருத்தப்படும். இந்த இயந்திரம் அந்த நபரின் இதயத் துடிப்பைக் கண்காணிக்கும்.




எதற்காக இந்தப் போட்டி:


ரூல்ஸ் எல்லாம் சரி, எதற்காக இந்தப் போட்டி என்று விளக்கம் கேட்பவர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது ஃபைனான்ஸ் பஸ் நிறுவனம். அந்த அறிக்கையில், "பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பேய்ப் படங்கள், சிறு பட்ஜெட்டில் எடுக்கப்படும் பேய்ப் படங்கள். இவற்றில் எந்த மாதிரியான படங்கள் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்ய விரும்புகிறோம். இதற்காகத் தான் பேய்ப் படம் பார்க்க எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்பவர்களுக்கு ஃபிட் பிட் இயந்திரம் பொருத்தி அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து படத்தின் தாக்கத்தைக் கண்டறிய உள்ளோம். இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது. மேலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் அமெரிக்காவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும்" என்று நிபந்தனைகளை விதித்துள்ளது. 13 படங்களையும் இணையத்தில் பார்ப்பதற்கான ரென்டலாக 50 டாலர் தனியாகத் தரப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை அமெரிக்க டாலர் மதிப்பில் 1300$. 


அந்த 13 படங்களின் பட்டியல் இதோ..


சா, அமிட்டிவில்லே ஹாரர், ஏ கொயட் ப்ளேஸ், ஏ கொயட் ப்ளேஸ் பாகம் 2, கேண்டிமேன், இன்சிடுவஸ், தி ப்ளேர் விட் ப்ராஜக்ட், சினிஸ்டர், கெட் அவுட், தி பர்ஜ், ஹாலோவீன், பாராநார்மல் ஆக்டிவிட்டி, அனபெல் (Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious. The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle) இவை தான் அந்தப் 13 படங்கள்.




பொதுவாகவே 13 என்ற எண்ணை பேயுடன் தொடர்புபடுத்தும் பழக்கம் உலகம் முழுவதுமே இருக்கிறது. பெரிய ஹோட்டல்களில் கூட அறை எண்ணில் 12-க்குப் பின் 14 என்று வைப்பதுண்டு. அந்த ஹாரர் எஃபெக்டை ஏற்படுத்த நினைத்தார்களோ என்னவோ போட்டிக்கு 13 படங்களைத் தேர்வு செய்துள்ளனர்.