இந்தியாவில் ஆப்பில் நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள்:
ஆப்பிள் நிறுவனம், இந்திய பணியாளர்களை 3 ஆண்டுகளில் 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில், இந்திய தொழிலாளர்களை அதிகரிக்கும் வகையில், சீனாவில் இருந்து விநியோகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது. சீனாவை தளமாகக் கொண்ட விநியோகச் சங்கிலியில் இருந்து பாதி அளவை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு முக்கியத்துவம்:
உள்ளூர் சந்தை மதிப்பில் கவனம் செலுத்தி, ஆப்பிள் உள்நாட்டு மதிப்பு கூட்டலை 11-12 சதவீதத்தில் இருந்து 15-18 சதவீதமாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது. இந்தியாவின் வளர்ந்து மக்கள் தொகை காரணமாக தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சந்தை மற்றும் ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் உள்ளூர் மதிப்பு கூட்டல் 14 சதவீதமாக உள்ளது, இது சீனாவின் 41 சதவீதத்தை விட மிகவும் குறைவாக உள்ளது.
உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்பிள் இந்தியாவில் தனது இருப்பை கணிசமாக அதிகரித்துள்ளது. பழைய ஐபோன் மாடல்கள் ஆரம்பத்தில் நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட நிலையில், ஆப்பிள் இப்போது அங்கு ஐபோன் 15 மாடல்களையும் உற்பத்தி செய்கிறது.
2024 நிதியாண்டில் இந்தியாவில் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐஃபோன்களை, ஆப்பிள் அசெம்பிள் செய்ததாக அறிக்கைகள் மூலம் தெரிவித்துள்ளது. அசெம்பிளி செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் சமீபத்திய முன்னேற்றங்கள் பலனளித்துள்ளன.
அதிகரிக்குமா வேலைவாய்ப்புகள்?
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் இரண்டு முக்கிய உற்பத்தி பங்குதாரர்களை கொண்டுள்ளது. அவை ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான், முறையே 67 சதவிகிதம் மற்றும் 17 சதவிகிதம் கொண்டுள்ளன. கூடுதலாக, கர்நாடகாவில் உள்ள விஸ்ட்ரான் ஆலையை நிர்வகித்து வரும் Tata Group, மீதமுள்ள 6 சதவீதத்தை வழங்குகிறது. உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியின் அர்த்தம், உலகளவில் அசெம்பிள் செய்யப்பட்ட 7 ஐபோன்களில் 1 இப்போது இந்தியாவில் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு தொழில்களை கொண்டு வருவதன் மூலம், இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்கும் எனவும், 3 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.