கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 16 கோடியே 10 லட்சத்து 68 ஆயிரத்து 812 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 44 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 88 லட்சத்து 60 ஆயிரத்து 334 ஆக உள்ளது. ஒரு கோடியே 88 லட்சத்து 63 ஆயிரத்து 960 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 288 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 




கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவில்  பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சாலையோரக்கடைகள் முதல், மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் வரை ஊரடங்கால் செய்வதறியாது உள்ளனர். ஊரடங்கு உத்தரவால் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.




இந்நிலையில் ஆன்லைன் வணிகதளமான அமேசான், வழக்கமான Amazon Prime Day நிகழ்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.குறிப்பிட்ட நாட்களில் தள்ளுபடி விலையுடன் பல பொருட்களை  விற்பனை செய்து லாபம் ஈட்டும் அமேசான். வழக்கமான விற்பனை விலையை விட Amazon Prime Day நாட்களில் விலை குறைவு என்பதால் வாடிக்கையாளர்களும் அந்த நாளுக்காக  காத்திருப்பது உண்டு. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் Amazon Prime Day நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள்,பண்டிகை நாட்கள் என குறிப்பிட்ட சீசனில் Amazon Prime Day நடத்தப்படும். ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் இந்த தள்ளுபடி நாட்களில் கிடைக்கும்.




அமேசான் மட்டுமின்றி பிரபல செல்போன் நிறுவனமான ரியல்மியும் தங்களுடைய அடுத்த மாடல் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ரியல்மி,ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் ரிலீஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த கடினமான சூழலில் தோள்கொடுக்கவே கவனம் செலுத்துவோம். திடமாக இருங்கள். வீட்டில் இருங்கள். நாம் மீண்டு வருவோம் என தெரிவித்துள்ளது.


பிரபல நிறுவனங்களின் இந்த முடிவால் பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஆல்லைன் மூலம் பொருட்கள் வாங்கி பரிசளிக்கலாம் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எடுத்த முடிவின் நோக்கம் கருதி அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு காலத்திலிருந்தே பெரும்பாலானோர் கடைகளுக்கு செல்வதை விட ஆன்லைன் பர்சஸ் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டத் துவங்கினர். அது தங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.