பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது இந்திய விற்பனையாளர்களின் பொருட்களை விற்பதற்காக தனி பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது. அதாவது இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கென made in india  வசதியை கடந்த திங்கள் கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில்தான் சில பொருட்கள் உண்மையாக கிடைக்கும் . உதாரணத்திற்கு மணப்பாறை முறுக்கு, காஞ்சி பட்டு , ஊத்துக்குளி வெண்ணை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி அந்தந்த மண்ணில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு GI  என்னும் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஆனாலும் விற்பனை தளங்களில் அதே பெயரில் ஏகப்பட்ட பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கிலும் , மக்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலும் one district one product என்னும் வாய்ப்பை அமேசான் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. 







இதன் மூலம் இந்தியா ஓடிஓபி (one district one product )பஜார் மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் உள்ளூர் தயாரிப்பு பொருட்கள், மற்றும் புவிசார் பெற்ற பொருட்கள் விற்பனைக்கு வரும். இதுகுறித்து, மத்திய சிறு, குறு தொழில் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாராயண ரானே வெளியிட்டுள்ள அறிக்கையில் "“ இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை ஆதரிக்கவும் , அதன் மூல சிறு குறு விற்பனையாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த புதிய வசதியை அமேசான் அறிமுகப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது “ என்றார்.











ஏற்கனவே அமேசானில் கைவினை கலைஞர்கள் மற்றும் பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சில வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இதில் கூடுதல் மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அமேசான் நிறுவனத்தில் கைவினை மற்றும் கைத்தரி பொருட்களை ஊக்குவிக்க செய்திருக்கும் இந்த வசதிக்காக இன்வெஸ்ட் இந்தியா மற்றும் ஐஐஏ ஆகிய அமைப்புகளுடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் வேளாண் பொருட்களின் உற்பத்தியை இந்த ஆன்லைன் விற்பனை மூலம் ஊக்குவிப்பது மூலம் ஊரக பகுதிகளிலும் வளர்ச்சி அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என அமேசான் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.