நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சியின் 39 வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுபவர் சௌமியாராணி பிரதீப். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில் 39 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் முறையாக சேகரிப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்த நிலையில், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தபடி சௌமியாராணி வாக்கு சேகரித்தார். குப்பைகளை சேகரித்தபடி துண்டு பிரசுரங்கள் கொடுத்து பா.ஜ.க விற்கு வாக்களிக்கும்படி சௌமியாராணி பிரதீப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றார். துண்டு பிரசுரங்களில் தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் துவங்கி தரப்படும், 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ் அப் சேவை அமைத்து பிரச்சினைகள் தீர்க்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அவர் அளித்து வருகின்றார்.




இதேபோல கோவை மாநகராட்சி 61 வது வார்டில் பா.ஜ.க.வேட்பாளராக இளம் பட்டதாரி பெண்ணான சிந்துஜா என்பவர் போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட வீட்டின் அருகே கள்ளிமடை பகுதியில்,  வீடு வீடாக தனது கைக்குழந்தையுடன் தீவிர பரப்புரை செய்து வருகிறார். தாம் வெற்றி பெற்றால் நீண்ட நாட்களாக இந்த பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னை, பேருந்து போக்குவரத்து, சாலை வசதிகளை மேம்படுத்துவது, கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுப்பது   உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.




வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100  வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர்.  நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சியில் பல முனை போட்டி இருந்தாலும் திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண