அமேசான் அலெக்சா


அமேசான் அலெக்சா என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு சாதனமாகும். இதன் மூலம் நாம் எந்த கேள்விகள் கேட்டாலும் அதற்கானப் பதிலை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் இன்றைய வானிலை அறிவிப்பு, விளையாட்டுத் தொடர்பான செய்திகள், கதைகள், பாடல்கள் என நமக்குப் பிடித்த எதைக்கேட்டாலும் எக்கோ ஸ்பீக்கர் மூலம் நாம் அதனைக்கேட்க முடியும். நம்முடைய கட்டளைக்கு ஏற்று தகவல்களை தெரிவிக்கும்போது stop  என்று கூறினாலே தானாக அதனை நிறுத்திவிடும். இப்படித்தான் இன்று வரை அமேசான் அலெக்ஸாவை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அலெக்ஸாவில் தற்போது நம்மிடம் பேசும் அந்தக்குரல் எப்போதுமே ஒரே குரல்தான். அது அலெக்சா நிறுவனமே உருவாக்கிய ஒரு குரலாக இருக்கும். காலப்போக்கில் நமக்கு பழக்கப்பட்ட ஒரு குரலாக அது ஆகிவிட்டாலும் அந்தக்குரலில் ஒரு மாற்றத்தை கொண்டுவரவுள்ளது அமேசான். 






பிடித்த குரல்..


அதாவது ஒரு நிமிடத்துக்கும் குறைவான ஒரு குரைலை அலெக்ஸாவிடம் பதியவிட்டு அதே குரலை அலெக்சாவின் குரலாக நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் அலெக்சா மேலும் நமக்கு நெருக்கமாக மாறிவிடும் என அமேசான் நினைக்கிறது. உங்களுக்கு பிடித்த பிரபலங்கள் குரலாகவோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, மனைவி, காதலி என யாருடைய குரலாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். இந்த புதிய வசதியை மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என அமேசான் குறிப்பிட்டுள்ளது. 


இது குறித்து தெரிவித்த அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ரோஹித் பிரசாத், '' நமக்கு பிடித்தமானவர்களை நாம் இந்த கொரோனா காலக்கட்டத்தில் இழந்திருப்போம். அப்படி யாரையுமே நாம் மிஸ் செய்யக் கூடாது எனபதே வரவிருக்கும் இந்த புதிய வசதியின் நோக்கம். தேவைப்படும் குரலை பதிவு செய்யலாம் என்பதால் நாம் இனி யாரையும் மிஸ் செய்ய வேண்டாம் என்றார். அமெரிக்காவில் நடந்த மாநாட்டின்போது இது தொடர்பான டெமோ வீடியோவை அமேசான் ஒளிபரப்பியது.






சர்ச்சை


கடந்த ஆண்டு அலெக்சா ஒரு சர்ச்சையிலும் சிக்கியது. 10 வயது சிறுவன் அலெக்ஸாவிடம் ஒரு சவாலை கேட்டுள்ளார். அதற்கு அலெக்ஸா, ஒரு மொபைல் போன் சார்ஜரை எடுத்து அதை ஒரு பாதி அளவு மட்டும் சார்ஜ் செய்யும் சாக்கெட்டில் வைத்து மற்றொரு பாதியை கையால் தொட வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன் அதற்கு 20 நிமிடம் கால அவகாசத்தையும் அலெக்ஸா அளித்துள்ளது. உயிருக்கே ஆபத்தான இதுமாதிரியான டாஸ்கை அலெக்ஸா கொடுப்பது ஏன் என சிறுவனின் தந்தை ட்விட்டரில் பதிவிட இந்த விவகாரம் சர்ச்சையானது.