ஆயிரக்கணக்கான ஏர்டெல் பயனர்களுக்கு கால், டேட்டா, பிராட்பேண்ட் சேவைகள் வேலை செய்யாமல் முடங்கியுள்ளது. இதனால் பயனாளர்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் ஏர்டெல் சேவைகள் முடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏர்டெல்லின் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரால் வழங்கப்படும் மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளில் பல பயனர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அழைப்புகளை மேற்கொள்ளவோ அல்லது எடுக்கவோ, தரவு சேவைகளை அணுகவோ அல்லது பிராட்பேண்ட் சேவை வழியாக இணையத்தை அணுகவோ கூட முடியவில்லை என்று பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
செயலிழப்பு கண்காணிப்பு தளமான Downdetector.com வெளியிட்டுள்ள தகவலின்படி, தோராயமாக 46% பயனர்கள் மொத்த சேவை தடையை எதிர்கொண்டனர். 32% பேர் சிக்னல் இல்லை என்றும், 22% பேர் மொபைல் இணைப்பு சிக்கல்களை அனுபவித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் குஜராத், டெல்லி, ஜெய்ப்பூர், சூரத், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய மாநிலங்களில் இந்த சேவை துண்டிப்பு அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். லக்னோ, கொல்கத்தா, சென்னை போன்ற பிற பகுதிகளும் அவ்வபோது இந்த சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பயனாளர்கள் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்திலும் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் அழைப்புகள் துண்டிக்கப்படுதல், மெதுவான இணைய வேகம் மற்றும் முழுமையான இணைப்பு இழப்பு ஆகியவை அடங்கும் என்பது தெரியவந்துள்ளது.
இந்த பிரச்சினைக்கு ஏர்டெல் இன்னும் பதிலளிக்கவில்லை. மேலும், அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால் இந்த இடையூறு வாடிக்கையாளர்களிடையே விரக்தியைத் ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த புகார்களுக்கு ஏர்டெல்லின் சமூக ஊடகப் பக்கம் பதிலளித்துள்ளது. அதில், “சிரமத்திற்கு மன்னிக்கவும். அந்தப் பகுதியில் தற்காலிக இணைப்பு சிக்கல் இருப்பதாகவும், 2 மணி நேரத்திற்குள் சேவை மீண்டும் தொடங்கப்படும். இது குறித்த உங்கள் புரிதலுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.