டிசம்பர் 26, 2004  இந்த நாளை யாராலும் மறக்க முடியாது, சுனாமி என்னும் ஆழிப் பேரலை கிட்ட தட்ட 2 லட்சம் உயிர்களை தன்னுடன் அழைத்து சென்று இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


சுமத்ராவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம்: 


டிசம்பர் 26, 2004 கிறிஸ்துமஸ் தினத்தின் மறுநாளான ஞாயிற்றுகிழமை அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்கரை அருகே 9.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோசியாவில் ஏற்ப்பட்ட இந்த  நிலநடுக்கத்தால் உருவான சுனாமி அலைகள் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை வரை சென்றது. இந்த சுனாமியால் சுமார் 1.7 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், பெரும்பாலும் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நான்கு நான்கு நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.


இந்தியாவில் சோகம்:


சுமத்ரா தீவு அருகே கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 20 நிமிடங்களில் அந்தமான் நிக்கோபார் தீவுகளை அடைந்த சுனாமி, 1,200 கிலோமீட்டர் தூரம் பயணித்து சென்னைக்கும் இலங்கைக்கும் இரண்டே மணி நேரத்தில் சென்றது. அந்த நேரத்தில், சரியான முன்னறிவிப்பு கருவி நம்மிடம் இல்லாததால், இந்திய மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகள் பேரழிவு அலைகளால் பெரும் பாதிப்பை அடைந்தது.






அப்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவின் நில அதிர்வு கண்காணிப்பு , சர்வதேச நில அதிர்வு தரவுகளை அதிகம் சார்ந்து இருந்தது. மேலும் வலுவான உள்நாட்டு நெட்வொர்க் இல்லாததால் நிலநடுக்கத்தைக் கண்டறிவதிலு,ம் சரியான நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.


ஹைதராபாத்தில் உள்ள கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) சுனாமியைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை கொண்டிருந்தாலும், தொலைதூரத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களால் ஏற்படும் சுனாமியை கண்டறியும் வசதி இல்லை இந்தியாவில் அப்போது இல்லாமல் இருந்தது. இந்த INCOIS அமைப்பு முக்கியமாக நில அதிர்வு தரவுகளை மட்டும நம்பியிருந்தது மற்றும் சுனாமி அலைகளை கண்டறியும் திறன் இல்லாமல் இருந்தது.


மறக்க முடியாத நினைவுகள்:


20 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதில்  உயிர் பிழைத்தவர்கள் இன்னும் தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களை தங்கள்  நினைவில் வைத்திருக்கிறார்கள், இந்தோனேசியாவின் ஆச்சே பகுதியில் உள்ள பெரும்பாலான கடலோரப் பகுதிகளில் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கி மக்களின் உயிரை பறித்துச் சென்றது. இந்த சுனாமியால் இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளும் பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகின.


தமிழ்நாட்டில் பறிபோன உயிர்கள்:


தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் இந்த ஆழி பேரையில் சிக்கி பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களை சந்தித்தது, தமிழ்நாட்டில் மட்டும் 6000 மேற்ப்பட்ட உயிர்களை கடல் அன்னையானது பறித்துச் சென்றது. வேளாங்கன்னிக்கு வந்த பக்தர்களையும் இந்த சுனாமி அலையானது வாரி சுருட்டி போட்டு சென்றது. பல இடங்களில் ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான உடல் புதைக்கப்பட்ட நெஞ்சை உருக்கும் காட்சிகளும் அரங்கேறின. இந்தியாவில் 10000க்கும் மேற்ப்பட்ட மக்கள் இந்த சுனாமியால் உயிரிழந்தனர். 






இந்த பேரழிவு நடந்து 20 ஆண்டுகள் கடந்த பின்பும் இதன் சோக நினைவுகள் மக்கள் மனதில் இன்றும் ஆறாத வடுவாய இருக்கிறது என்று சொன்னால் அது  மிகையாகாது.