குழந்தைகளுக்கு ஆதார் அடையாள அட்டை எடுக்க வேண்டும் எனில்,  குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் மற்றும் குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட இரு ஆவணங்கள் முக்கியமாகத் தேவைப்படுகிறது.


இந்திய மக்கள் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆதார் எடுக்கும் வசதியினை UIDAI கொண்டுள்ளது. பெரியவர்களுக்கு பயோமெட்ரிக் முறையினைப் பயன்படுத்தி ஆதார் அடையாள அட்டை எடுக்கப்படும் வரும் நிலையில், குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் முறை எடுப்பதற்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து UIDAI வெளியிட்டுள்ள தகவல்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.






குழந்தைகளை பள்ளிக்குச் சேர்ப்பது முதல் வங்கி அல்லது தபால் நிலையங்களில் ஏதாவது சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் ஆதார் அடையாள அட்டை தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்தால் முதலில்  ஆதார் இணையப் பக்கத்திற்கு சென்று அப்பாயிண்ட்மெண்ட் பெற வேண்டும். அதற்கு அதற்கு https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற ஆதார் இணையப் பக்கத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அல்லது ஆதார் மையம் மற்றும் தபால் நிலையங்களில் அதற்கான விண்ணப்பத்தினைப்பெற்று குழந்தைகளின் பெயரினைப் பதிவு செய்துகொள்ளலாம்.


பின்னர் ஆதார் அடையாள அட்டை எடுக்கும்பொழுது, கண்டிப்பாக குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையிலிருந்து வெளியேற்றும் சீட்டு அல்லது குழந்தையின் பள்ளி அடையாள அட்டை மற்றும் குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை ஆகிய இரண்டு ஆவணங்கள் முக்கியமாக தேவைப்படுகிறது. மேலும் பிறந்த ஒரு நாள் முதல் 5 வயது வரை குழந்தைக்கு கைரேகைப் பதிவு எடுக்க முடியாது. 5 வயது தாண்டிய பின்னர் குழந்தையின் கைரேகையை அப்டேட் செய்துகொள்ளலாம். ஐந்து வயதுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு நீல நிறத்தில் உள்ள ஆதார் அட்டை’வழங்கப்படும். நாம் ஐந்து வயதுக்கு முன்பே குழ்ந்தைகளுக்கு ஆதார் அட்டை பெற்றுவிட்டால், குழந்தை ஐந்து வயது ஆன உடன் குழந்தையின் பயோமெட்ரிக் அடையாளங்கள் புதிதாக எடுக்கப்பட்டு ஆதார் அப்டேட் செய்ய வேண்டும். இதே போல் 15 வயது ஆன உடனும் குழந்தையின் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும்.



குறிப்பாக சில மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் வழிமுறையை மருத்துவமனைகளே மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கேஸ் இணைப்பு, வங்கிகளின் கணக்கு துவங்குவது, அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கு ஆதார் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.