நமது சூரிய கும்பத்தில் இருந்து மிக அருகாமையுள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற விண்மீனில் புதிய கோள் இருப்பதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புரோக்சிமா செண்ட்டாரி (Proxima Centauri, அருகாமையில் இருப்பது) என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன். இது ஒரு சிறு நட்சத்திரம் ஆகும். இது பூமியிலிருந்து 4.2 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. புரோக்சிமா செண்ட்டாரி செங்குறளி (red dwarf) விண்மீன் வகையைச் சேர்ந்தது. இந்த, விண்மீனில் ஏற்கனவே புரோக்சிமா செண்ட்டாரி பி மற்றும் சி என்ற இரண்டு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது கோளினை ஐரோப்பிய சதர்ன் வான்காணக (European Southern Observatory) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை அறியப்பட்ட புறக்கோள்களில் புரோக்சிமா செண்ட்டாரி பி நமது சூரியக் குடும்பத்திற்கு மிகக்கிட்டவாகவுள்ள புறக்கோளும், மிகக்கிட்டவாகவுள்ள வாழ்தகமைப் பிரதேசத்தில் (habitable Zone) உள்ள புறக்கோளும் ஆகும். (வாழ்தகமைப் பிரதேசம் என்பது ஒரு நட்சத்திரத்தைச் சூழ உயிரினங்கள் வாழக்கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும் விண்வெளிப் பகுதியாகும்.)
புதியாக கண்டறியப்பட்ட இந்த கிரகத்துக்கு, புரோக்சிமா டி (Proxima d) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, அதன் விண்மீனை (புரோக்சிமா செண்ட்டாரி) சுற்றி தன் கோளப்பாதையில் சராசரியாக வெறும் 5 சூரிய நாட்களில் நான்கு மில்லியன் கிலோமீட்டரைக் கடக்கின்றது. நமது பூமி, பூமி சூரியனைச் சுற்றி தன் கோளப்பாதையில் சராசரியாக 365.2564 சூரிய நாட்களில் 150 மில்லியன் கி.மீ. அல்லது ஒரு விண்மீன் ஆண்டை (sidereal year) கடக்கின்றது. புதனுக்கும் (Mercury)- சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 10 மடங்கு குறைவான தூரத்தை புரோக்சிமா டி - புரோக்சிமா செண்ட்டாரி கொண்டுள்ளது. இந்த கோளில் உயிர் வாழ ஏற்றவையா என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.
டாப்ளர் பிறழ்ச்சியின் மூலம் ஆய்வாளர்கள் இப்புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்துக்கு அருகாமையுள்ள விண்மீன்கள் பல்வேறு ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. அதிலும், குறிப்பாக புரோக்சிமா செண்ட்டாரி போன்ற செங்குறளி (red dwarf) விண்மீன் மூன்று-கோள் அமைப்பு முறையைக் (Triple Star System) கொண்டு இயங்குகிறது. ஏற்கனவே, புரோக்சிமா செண்ட்டாரி பி கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.