அதிவேக இண்டர்நெட் வழங்கும் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தற்போது பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவில்  ஜியோ தனது  5ஜி சோதனையை தொடங்கியுள்ளது. முன்னதாக ஏர்டெல் 5ஜி சோதனை குறித்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல எரிக்சன் மொபிலிட்டி என்ற தொழில்நுட்ப  நிறுவனம் நடத்திய ஆய்வில் , உலகம் முழுவதும் 160 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்கியுள்ளன. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி  சேவை உலகம் முழுவதும் 580 மில்லியனை சந்தாவை எட்டும் எனவும் கணித்துள்ளது. பொதுவாக 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை காட்டிலும் அதிவேக இணைய வேகத்தை 5ஜி கொண்டிருக்கும் என்பதால் அதற்கு பிறகு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 



உலகம் சந்தித்த இந்த கொரோனா பேரிடர் காலக்கட்டம் மொபைல்போன்களின் தேவையையும், அதன் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. குழந்தைகளின் கல்வி முதல் அலுவலக வேலைகள் வரை அனைத்திலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது ஸ்மார்ட்போன். இந்நிலையில் இதுவரையில் இருந்த மொபைல் பயன்பாட்டை விட  50 விழுக்காடு அதன் பயன்பாடு அதிகரிக்கும்என கூறுகிறது எரிக்சன் மொபிலிட்டி . மேலும் மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் , தனிநபர் டேட்டா பயன்பாடும் உயருமாம். இதுவரையில் 14.6 ஜிபியாக இருந்த தனிநபர்   டேட்டா பயன்பாடு  2026 ஆம் ஆண்டில் 40 ஜிபியாக உயரும் என கூறப்படுகிறது.


இந்தியாவை பொருத்தவரையில் மாதம் ஒன்றிற்கு 9.5 Exabyte டேட்டா பயன்படுத்தப்பட்டு வருகிறது, இது  41 Exabyte ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில கேட்ஜெட்ஸ் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு அறிமுகமான நிலையில், 2021 ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 2022 ஆண்டி தொடக்கத்தில், வெர்ச்சுவல் ரியாலிட்டி, கேமரா,ஆளில்லாத விமானங்கள் (ட்ரோன்ஸ்) போன்றவற்றின் உற்ப்பத்தி மற்றும் செயல்பாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் முக்கியத்துவம் வகிக்கும் என கூறப்படுகிறது.



இந்தியாவை பொருத்தவரை 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதனை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 4 கோடியை எட்டலாம் என கூறப்படுகிறது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 33 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை 5ஜி சேவை பெற்றிருக்குமாம். 3ஜி மற்றும் 4ஜி சேவைகளில் உயராத மொபைல் பயன்பாடு 5ஜி சேவையில் அதிகரிக்குமாம், அதாவது புதிதாக  43 கோடி மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்குவார்கள் என்கிறது அந்த ஆய்வு.


அடுத்த 5 ஆண்டுகளில்  66 சதவிகித்தினர் 4ஜி தொழில்நுட்பத்தையும், 26 சதவிகித்தினர் 5ஜி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவார்கள், மேலும் உலகிலேயே மிக வேகமாக  பயன்படுத்தப்பட்ட  தொழில்நுட்பம் 5ஜியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறது எரிக்சன் மொபிலிட்டி.