இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகாசஸ் செயலி இப்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ மீது ஏற்கெனவே வாட்ஸ் அப் நிறுவனமும் புகார் கொடுத்திருந்தது. 


இந்தச் சூழலில் தற்போது 'த வையர்' என்ற ஆங்கில பத்திரிகை தளம் இது தொடர்பாக ஒரு விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த ஸ்பைவேர் அட்டாக் தொடர்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள் என்னென்ன?



  • பெகசஸ் வைரஸ் மூலம் இந்தியாவிலுள்ள சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரின் வாட்ஸ் அப் கணக்குள் வேவு பார்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

  • தற்போது வரை கிடைத்துள்ள செய்தி தகவல்களின்படி 40 பத்திரிகையாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. இவை தவிர பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்ள 2 அமைச்சர்கள், பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகள் மற்றும் சில தொழிலதிபர்கள் ஆகியோரின் கணக்குகளும் வேவு பார்க்கப்பட்டதாக கூறுப்படுகிறது. இது தொடர்பான விவரம் விரைவில் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 





  • மேலும் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் நம்பரும் இந்த பெகசஸ் ஸ்பைவேர் அட்டாக்கில் உள்ளது தெரியவந்துள்ளது. எனினுன் அவர் இன்னும் இதே நம்பரை பயன்படுத்துகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. 

  • வையர் பத்திரிகையின் ஆய்வுகளின்படி 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் அதிக பேரின் நம்பர் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை குறி வைத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இது தொடர்பான உரிய ஆவணங்கள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை. 

  • பெகசஸ் ஸ்பைவேரை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ, "எங்களுடைய ஸ்பைவேர் யாருடைய கணக்கையும் வேவு பார்க்கவில்லை. இது தொடர்பாக வரும் புகார்கள் அனைத்தும் தவறானவை. நாங்கள் இது குறித்து ஒரு வழக்கு தொடர உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது. 

  • இந்த விவகாரத்தில் இந்திய அரசு, "அரசு இந்த ஸ்பைவேரை பயன்படுத்தி சிலரை கண்காணித்தது என்று கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை. அரசு ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை" எனத் தெரிவித்துள்ளது. 

  • இந்த பெகசஸ் தொடர்பான தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வந்த கேள்வி ஒன்றுக்கு அரசு, "அரசு எந்த ஒரு நபரையும் வேவு பார்க்கவேண்டும் என்ற எந்தவித  முயற்சியும் எடுக்கவில்லை" என்று கூறியுள்ளது. ஆனால் இந்த கேள்வியில் கேட்கப்பட்டிருந்த பெகசஸ் அரசு வாங்கியதா என்பதை அரசு மறுக்கவில்லை என்ற தகவலும் உள்ளது. 





  • ஃபாரன்சிக் நிபுணர்களின் ஆய்வுகளின்படி இந்த பெகசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பல ஐபோன்களை இது அதிகம் வேவு பார்த்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

  • இந்த ஹேக்கிங் தொடர்பாக தற்போது பெரியளவில் செய்தி வெளியாக முக்கிய காரணம் பாரீஸில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் அம்னெஸ்டி இண்டர்நெஷ்னல் ஆகிய இரு அமைப்புகளுக்கும் கிடைத்த தகவல்கள் தான். அவை பல்வேறு நாட்டின் ஊடகங்களுக்கு இந்த தகவலை அளித்துள்ளதால் தான் இவ்வளவு பெரிதாக இந்த விவகாரம் எழுந்துள்ளது. 

  • இந்தியா தவிர அஜர்பைஜான், பஹ்ரைன்,கஜகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ஏமிரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த பெகசஸ் ஸ்பைவேர் அட்டாக் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க: Whatsapp-ஐ எப்படி ஹேக் செய்கிறது இந்த பெகசஸ் ஸ்பைவேர்..!