வங்காளதேசம் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஜிம்பாப்வே நாட்டின் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணியின் கேப்டன் தமீமும், அனமுல்லும் ஆட்டத்தை தொடங்கினர். கேப்டன் தமீம் 10 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 50 ரன்களை விளாசி அவுட்டானார். அனமுல் 20 ரன்களில் அவுட்டாக ஷான்டோ 38 ரன்களிலும் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய முஷ்பிகிர் ரஹீம் 25 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மகமதுல்லாவும், ஆபிப் ஹொசைனும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். ஹொசைன் 41 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்து வங்காளதேசம் விக்கெட்டுகளை இழந்தாலும் மகமதுல்லா மட்டும் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 80 ரன்களுடன் இருந்தனர். வங்காளதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 291 ரன்கள் எடுத்தால் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வேவிற்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலே கைடானோ டக் அவுட்டாகினார். அடுத்து வந்த இன்னொசன்ட் கையா 7 ரன்களிலும், மாதவரே 2 ரன்களிலும் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய தொடக்க வீரர் மாருமனியும் 25 ரன்களில் அவுட்டானார். 49 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் ரெஜிஸ் சகப்வாவும், சிக்கந்தர் ராசாவும் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர். ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விளாசியும், ஓரிரு ரன்களாகவும் சேர்த்து அணியின் ஸ்கோரை ஏற்றினர். சகப்வா அதிரடியாக மட்டையை சுழற்றினார். மைதானத்தில் நங்கூரமிட்ட இருவரையும் பிரிக்க வங்காளதேச பந்துவீச்சாளர்களுக்கு எந்த பலனுமே கிடைக்கவில்லை. அபாரமாக ஆடிய கேப்டன் சகப்வா சதமடித்தனர்.
அணியின் ஸ்கோர் 250 ரன்களை எட்டியபோது கேப்டன் சகப்வா 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 75 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 102 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். அடுத்து களமிறங்கிய டோனி முனியோங்கா அதிரடியாக ஆடினர். நிதானமாக ஆடிய சிக்கந்தர் ராசாவும் சதமடித்து அசத்தினார்.
இதனால், 47.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 291 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசா 127 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 117 ரன்களுடனும், டோனி 16 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரையும் ஜிம்பாப்வே வென்று அசத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்