டபிள்யூ டிடி கண்டெண்டர் டேபிள் டென்னிஸ் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுபவ வீரர் சரத் கமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் சரத் கமல் தென்கொரியாவின் லிம் ஜாங்கூனை வீழ்த்தினார். 


 


இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் சரத் கமல் குரேஷியா நாட்டின் டாமிஸ்லவ் புகாவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சரத் கமல் ஆதிக்கம் செலுத்தினார். இந்தப் போட்டியை இறுதியில் 11-8,11-7,11-4 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அத்துடன் அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் பெற்றார். நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இவர் சீனாவின் யுவான் லிசனை எதிர்த்து விளையாட உள்ளார். 39 வயதான சரத் கமல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சரத் கமல் 3ஆவது சுற்று வரை முன்னேறி அசத்தியிருந்தார். இதுவரை 4 முறை ஒலிம்பிக் போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார். அத்துடன் தொடர்ச்சியாக 9 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை இவர் வென்று அசத்தியுள்ளார். மேலும் 4 காமன்வெல்த் தங்கப்பதக்கங்கள் மற்றும் 2 ஆசிய பதக்கங்களை இவர் வென்று அசத்தியுள்ளார். 


 






முன்னதாக நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் மற்றும் மணிகா பட்ரா இணை உலக தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ள ஹாங்காங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஹாங்காங் ஜோடிக்கு இந்திய இணை மிகவும் சவாலாக அமைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியை சத்யன் - மணிகா ஜோடி 3-2 என்ற கணக்கில் போராடி வென்றது. அத்துடன் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இறுதிப் போட்டியில் இந்த இணை சீனாவின் நம்பர் ஒன் ஜோடியான லின் யூ மற்றும் செங் ஐ சிங் ஆகியோரை எதிர்த்து விளையாட உள்ளது. 




மேலும் படிக்க:உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சாதனை இடத்தை பிடித்த சத்யன் - மணிகா பட்ரா ஜோடி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண