டபிள்யூ டிஏ மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று முதல் சென்னையில் தொடங்குகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்குகிறது. நேற்று வரை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்திய வீராங்கனைகள் அனைவரும் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
இந்நிலையில் இன்று முதல் சென்னை ஓபன் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் கர்மன் தாண்டி இன்று நடைபெறும் முதல் சுற்றுப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டின் பாகேட்டை எதிர்த்து விளையாட உள்ளார். போட்டிகள் அனைத்தும் தினமும் மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளன.
இந்தத் தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்திய அன்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தாண்டி ஆகியோர் விளையாட உள்ளனர். அதேபோல் இரட்டையர் பிரிவில் அன்கிதா ரெய்னா நெதர்லாந்து வீராங்கனையுடன் இணைந்து விளையாட உள்ளார். மேலும் பிரார்த்தனா தாம்ப்ரே ஜெஸ்ஸி ரோம்பிஸ் உடன் இணைந்து விளையாட உள்ளார்.
இன்று முதல் தொடங்கும் டென்னிஸ் போட்டிகள் வரும் 18ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தப் போட்டியில் ஒற்றையர் பட்டத்தை வெல்லும் வீராங்கனைக்கு சுமார் 2 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்தத் தொடரில் அமெரிக்கா வீராங்கனை அலிசன் ரிஷ்கே அமிர்தராஜ் முதல் நிலை வீராங்கனையாக பதிவாகியுள்ளார். இவருக்கு ரஷ்ய மற்றும் பிரான்ஸ் வீராங்கனைகள் கடும் போட்டியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்கெட் விற்பனை:
சென்னை ஓபன் டென்னிஸ் தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த 9ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தத் தொடருக்கு தினமும் 300 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் 850 ரூபாய், 1700 ரூபாய் மற்றும் 2550 ரூபாய் என்ற விலைகளில் 7 நாட்களுக்கும் சீசன் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிக்கெட்களை ரசிகர்கள் சென்னை ஓபன் இணையதளத்தில் நேரடியாக புக் செய்து பெற்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.