Govt Suspends WFI: பல்வேறு குற்றச்சாட்டுகளால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம்:


இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்து மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மல்யுத்த சம்மேளனத்திற்கு அண்மையில் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. பிரஜ் பூஷன் சிங் ஆதரவாளரான சஞ்சய் சிங் மல்யுத்த  சம்மேளன தலைவராக கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ் பூஷன் சிங் ஆதரவாளர்களே தேர்தலில் பெரும்பாலும் வெற்றி பெற்று இருந்தனர். இதற்கு மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்க, ஒலிம்பிக்கம் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா அரசு தனக்கு வழங்கிய பத்ம ஸ்ரீ, கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை  திருப்பி அளிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் தான், இந்திய மல்யுத்த சம்மேளனத்தையே மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது.






மல்யுத்த சம்மேளன பிரச்னை:


பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், மல்யுத்த சம்மேளன தலைவருமான ப்ரிஜ் பூஷன் சிங், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடப்பாண்டு தொடக்கத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், பிரிஜ் பூஷன் சிங் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் டெல்லியில் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதில் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் யாரும் போட்டியிடக்கூடாது எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், விரர் மற்றும் வீராங்கனைகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர்களே பெரும்பான்மையாக வென்றனர். அதைதொடர்ந்து, 15 மற்றும் 20 வயதிற்கு உட்பட்ட வீரர், வீரர்களுக்கான மல்யுத்த போட்டிகள் நடப்பாண்டு இறுதிக்குள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மொத்த மல்யுத்த சம்மேளனத்தையும் ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.