டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முக்கியமான ஒன்றான விம்பிள்டன் போட்டியில் ஆடவர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் செர்பிய வீரரான நோவாக் ஜோகோவிச். அவருக்கு மற்றொரு ஜாம்பவானான ரஃபேல் நடால் பாராட்டு தெரிவித்துள்ளார்.


முன்னதாக, அரையிறுதி சுற்று போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காயம் காரணமாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த ரஃபேல் நடால் விலகினார். இதனால் முதல் அரையிறுதிப் போட்டியில் கிரியோஸ் வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டார்.  இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்  கேமரூன் நோரியை 2-6,6-3,6-2,6-4 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றார்.


இறுதிப் போட்டியில் கலக்கிய ஜோகோவிச்:
இந்நிலையில் நடப்புச் சாம்பியன் ஜோகோவிச் மற்றும் கிரியோஸ் இடையேயான இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் செட்டில் கிரியோஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் முதல் செட்டை 6–4 என்ற கணக்கில் வென்று அசத்தினார். அதன்பின்னர் இரண்டாவது செட்டில் ஜோகோவிச் அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக விளையாட தொடங்கினார். இரண்டாவது செட்டை ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரு வீரர்களும் தலா 1 செட்டை வென்று இருந்தனர். 


இதைத் தொடர்ந்து மூன்றாவது செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி கேம்களை வென்று வந்தனர். இருவரும் 2-2 என்ற கணக்கில் இருந்தனர். அதன்பின்னர் ஜோகோவிச் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அசத்தினார். அடுத்து நடைபெற்ற நான்காவது சுற்றில் இரு வீரர்களும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருவரும் 5-5 என்ற கணக்கில் கேம்களை வென்று இருந்தனர். அடுத்து இருவரும் 6-6 என்ற கணக்கில் இருந்தனர். இதனால் நான்காவது செட் டைபிரேக்கருக்கு சென்றது. அந்த டைபிரேக்கரை ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 4-6,6-3,6-4,,7-6 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.


ALSO READ | IND vs ENG 1st ODI Highlights: இங்கி. எதிரான போட்டியில் இந்தியா படைத்த சாதனைகள்..! என்னென்ன தெரியுமா?


ஜோகோவிச்சை வாழ்த்திய நடால்:
இந்நிலையில், விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற நோவாக் ஜோக்கோவிச்சை பாராட்டியுள்ளார் மற்றொரு டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால். வாவ்! சிறப்பான தருணம். ரசித்து மகிழவும் என்று வாழ்த்தியிருந்தார் நடால்.
ஜோகோவிச்சுக்கு இது 7வது விம்பிள்டன் பட்டம். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 21வது பட்டம். ரஃபேல் நடால் இதுவரை 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஜோகோவிச் அவற்றைவிட ஒரு டைட்டில் மட்டுமே குறைவாகப் பெற்றுள்ளார். விரைவில் அதை சமன் செய்வார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.






இந்நிலையில், திங்களன்று ஜோக்கோவிச் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில் அந்த வீரர் தனது இரு குழந்தைகளுடன் மைதானத்தை உல்லாசமாக சுற்றி வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து அவர், என் குழந்தைகள் இந்த வரலாற்று சிறப்புமிக்க டென்னிஸ் மைதானத்தில் ஓடுவதைக் காண்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. என் குடும்பம் என்றென்றும் நினைவுகூரக் கூடிய விலைமதிப்பற்ற தருணம் இது. விம்பிள்டன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி. வாழ்நாளுக்குமான இனிமையான நினைவுகளை இங்கிருந்து எடுத்துச் செல்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.