உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் அவர்.


19 வயதேயான இளம் வீராங்கனை அன்ஷூ மாலிக், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்கள் 57 கிலோ எடைபிரிவில் போட்டியிட்டார். அரை இறுதிப்போட்டியில் உக்ரேன் நாட்டு வீராங்கனை சொலோமியா விங்க்கை 10-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 


இறுதிப்போட்டியில், அமெரிக்க வீராங்கனை, 2016 ஒலிம்பிக் பதக்க வீராங்கனை ஹெலனை எதிர்த்து போட்டியிட்ட அவர், தோல்வியுற்றார். இதனால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு, கீதா போகட் (2012), பபிதா போகட் (2012), பூஜா தண்டா (2018), வினேஷ் போகட் (2019) ஆகியோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






ஹரியானா மாநிலத்தின் நிதானி என்ற கிராமத்தில் 2001ஆம் ஆண்டு பிறந்தவர் அன்ஷூ மாலிக். இவர் ஒரு பெரிய மல்யுத்த குடும்பத்தில் பிறந்ததால் இவரது ரத்தத்தில் மல்யுத்தம் ஊறிப்போய் இருந்தது. இவருடைய தந்தை தரம்விர் மாலிக் தேசிய அளவில் மல்யுத்த வீரர். மேலும் இவருடைய மாமா பவன் மாலிக் தேசிய மல்யுத்த வீரர் மற்றும் ஹரியானா மாநிலத்தின் கேசரி பட்டத்தை வென்றவர். இதனால் இவர் எளிதாக மல்யுத்த விளையாட்டிற்கு வந்தவர் என்று நினைக்கலாம். ஆனால் இவர் மல்யுத்தம் வந்த கதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. 


அதாவது இவருடைய தந்தை தரம்விர் மாலிக் மல்யுத்த வீரராக இருந்தப் போது ஒரு தேசிய போட்டியில் பங்கேற்றார். அதன்பின்னர் இவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மல்யுத்த விளையாட்டை தொடர முடியாத சூழல் உருவானது. அப்போது இவர் தன்னுடைய கனவை தனது மகன் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்தார். அதற்காக தன்னுடைய 8 வயது மகனுக்கு மல்யுத்த பயிற்சி அளிக்க தொடங்கினார். ஆனால் அவர் தன்னுடைய மூத்த மகள் மல்யுத்தம் விளையாடுவார் என்று அப்போது கண்டறியவில்லை. தனது ஓய்வு நேரத்தில் மகள் அன்ஷூவிடம் தன்னுடைய நிறைவேறாத மல்யுத்த ஆசைகள் குறித்து தொடர்ந்து பேசி வந்துள்ளார். 




இது அன்ஷூவிற்கு மல்யுத்தம் மீது அதிக ஆசையை ஏற்படுத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டு ஒருநாள் தன்னுடைய தம்பி பயிற்சிக்கு செல்லும் போது இவரும் தந்தையிடம் கேட்டு பயிற்சிக்கு வருவதாக கூறியுள்ளார். அப்போது விளையாட்டாக மல்யுத்த களத்தில் இறங்கியுள்ளார். அந்த சமயத்தில் இவருடைய ஆட்டத்தை கண்டு மிரண்டு போன தந்தை தரம்விர் அதிர்ச்சி அடைந்தார். அந்த சமயத்தில் ஒரு முடிவை எடுத்தார். தன்னுடைய பதக்க கனவை தன் மகனுக்கு முன்பாக மகள் அன்ஷூ நிறைவேற்றுவார் என்பது தான் அது. அதன்பின்னர் அவருக்கு தீவிர மல்யுத்த பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளார். 

 

6 மாதங்களுக்கு பிறகு, அன்ஷூ மாலிக் 3 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்று வந்த வீராங்கனைகளை எளிதாக தோற்கடித்து அசத்தினார். பின்னர் நிதானியிலுள்ள மல்யுத்த பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அதன்பின்னர் ஜூனியர் பிரிவில் 2019ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். மேலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தொடரிலும் தங்கம் வென்று அசத்தினார். பயிற்சி தொடங்கிய பத்து ஆண்டுகளுக்குள் ஒலிம்பிக் போட்டிக்கும் முன்னேறி அசத்தினார்.  டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், இவர் மல்யுத்தத்தில் நீண்ட நாட்களுக்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண