ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20-ம் தேதி சர்வதேச செஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களில், கிட்டத்தட்ட 605 மில்லியன் மக்கள் வழக்கமாக செஸ் விளையாடுபவர்கள் என ஐ.நா நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1988-ல் முதல் கிராண்ட் மாஸ்டரோடு தொடங்கிய இந்தியாவின் செஸ் பயணத்தில் இப்போது 60-க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்களை இந்தியா பெற்றிருக்கின்றது. ஆனால், இந்தியா கண்டுக்கொண்ட கிராண்ட் மாஸ்டர்களில் பெரும்பாலானோர் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில்! கிட்டத்தட்ட 22-க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் சுப்பரமணியன் விஜயலக்ஷ்மி ஆகியோர் சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டுக்கான பயிற்சி மையங்கள் இருக்கின்றன. பள்ளி கூடங்களில், இணையதளத்தில் என செஸ் விளையாட்டு பயிற்சி ‘மொபைல் போனில்’ எளிதாக கிடைக்கூடிய ஒன்றாக மாறிவிட்டதால், வீட்டில் உள்ள குட்டி சுட்டீஸ் ஆர்வமாக செஸ் விளையாடுகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள மற்ற பகுதிகளிலும் செஸ் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தும் டிஜிட்டல் யுகத்தை பற்றிய கேள்வி ஒன்றுக்கு விஸ்வநாதன் ஆனந்த இப்படி தெரிவித்திருக்கிறார். “செஸ் விளையாட்டில் கம்ப்யூட்டர்களின் தாக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியது. ஆனால், மேன் டு மேன் விளையாட்டுகளை பார்க்கவே மக்கள் விரும்புவார்கள். ஒரு கம்ப்யூட்டருக்கு எதிரானப் போட்டி உயிரோட்டமாக இருக்காது. மேன் டு சிஸ்டம் வளர்ச்சி செஸ் விளையாட்டுக்கு பாதகமாக இருக்காது. சொல்லப்போனால், சிஸ்டமில் விளையாடும் போது சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ள முடியும். சிஸ்டம் டிப்ஸ் ரொம்ப ஓப்பன். இதே நுணுக்கங்களை மற்றவர்களும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. எனவே, கம்ப்யூட்டரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, மேன் டு மேன் விளையாடும்போது கிடைக்கும் அனுபவமே சவாலான போட்டிகளை எதிர்கொள்ள உதவும்.’’ என்கிறார். எனவே, ஆன்லைனோ, ஆஃப்லைனோ, மிக இளம் வயதிலேயே செஸ் விளையாட்டுக்கான பயிற்சியை தொடங்கிவிடும் வீரர் வீராங்கனைகள், சர்வதேச செஸ் அரங்கில் முத்திரை பதித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய செஸ் வீரர் வீராங்கனைகளின் லிஸ்ட் இங்கே!
விஸ்வநாதன் ஆனந்த்:
இந்தியாவில் செஸ் என்றவுடன் நினைவிற்கு வரும் பெயர், விஸ்வநாதன் ஆனந்த். குறிப்பாக, தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய காரணமான விளையாட்டு வீரர். செஸ் விளையாட்டி இ.எல்.ஓ ரேட்டிங்கில் 2800 புள்ளிகளை கடந்த கிராண்ட் மாஸ்டர்.
பிரக்ஞாநந்தா
இளம் வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இவர், உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர். உலக செஸ் அரங்கில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் கவனிக்க வைத்த இளம் கிராண்ட் மாஸ்டர்.
குகேஷ்
சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த குகேஷ்.டி, கடந்த 2019-ம் ஆண்டு உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். 12 வருடம் 10 மாதம் வயதுடையபோது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்ஞானந்தாவின் சாதனையை, மூன்று மாதங்கள் முன்னதாகவே வென்று அசத்தினார்.
சசிகிரன் கிருஷ்ணன்
1999-ம் ஆண்டை தொடர்ந்து, 2002, 2003, 2013 ஆண்டுகளில் இந்திய செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர், சர்வதேச செஸ் அரங்கில் இந்தியா சார்பாக பங்கேற்ற முக்கிய வீரர்களுள் ஒருவர்.