ஈட்டி எறிதலில் உலக சாம்பியனான இந்திய விரர் நீரஜ் சோப்ரா, டைமண்ட் லீக் தொடரில் இரண்டாவது இடம் பிடித்தார்.


டைமண்ட் லீக்:


சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் முன்னணி தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.


ஈட்டி எறிதல்:


இந்த சூழலில், ஈட்டி எறிதல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். 25 வயதான அவர் 3 வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி முறையே 80.79மீ, 85.22மீ மற்றும் 85.71மீட்டர்  தூரம் அளவிற்கு ஈட்டியை எறிந்தார். இருப்பினும் செக் குடியரச சேர்ந்த ஜாகுப் வாட்லெஜ் 85.86 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடம் பிடித்த ஜாகுப், டைமண்ட் லீக்கில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அதேநேரம், மூன்று வாய்ப்புகளில் அதிகபட்சமாக 85.71மீட்டர்  தூரம் வீசிய நிரஜ் சோப்ரா இரண்டாவது இடம் பிடித்தார். இதன் மூலம் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். 






 


காயத்தால் அவதி:


போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ் சோப்ரா ” உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு தோள்பட்டை மற்றும் முதுகுப்பகுதியில் தனக்கு வலி இருப்பதாக” கூறியிருந்தார். 100 சதவிகித முழு உடற்தகுதி இல்லாத நிலையிலும், டைமண்ட் லீக்கில் பங்கேற்று நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 


தவறிய ஹாட்ரிக் கோல்ட்:


கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அண்மையில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்று இருந்தார். இதனிடையே,  கடந்த ஆண்டு மே மற்றும் ஜுன் மாதங்களில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கோப்பையை கைப்பற்றி இருந்தார். இதனால்,  புதாபெஸ்ட் போட்டியிலும் வென்று ஹாட்ரிக்  வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.