ஒவ்வொரு ஆண்டும் மே 7-ஆம் தேதி உலக தடகள தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை கொண்டு சேர்ப்பதுடன், ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் உருவாக்குவதே இதன் முக்கியமான நோக்கம். அந்த வகையில் இந்தியாவில் தடகள விளையாட்டுகள் பிரபலமடைய காரணமான 5 வீரர்கள் அடையாளம் காண்போம்..
1) மில்கா சிங்
பறக்கும் சிங் ( Flying சிங் ) என அழைக்கப்படுபவர். இந்திய ராணுவத்தில் இருந்து இந்திய தடகளதிற்கு வந்தவர். 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இன்று வரை இவர் படைத்த சாதனை முறியடிக்கப்படவில்லை. ஒலிம்பிக்கில் என்றுமே இந்தியாவின் கோட்டையாக தடகளம் இருந்ததில்லை. ஆனால் 1960-ல் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் - முதல்முறையாக தடகளத்தில் பதக்கம் வெல்வோம் என்ற கனவோடு காத்திருந்தனர் இந்தியர்கள், அதற்கு முக்கிய காரணம் மில்கா சிங். ஒலிம்பிக் தொடரின் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தின் இறுதி போட்டி - இந்தியாவே உற்று நோக்கி கொண்டிருந்தது. ஓட தொடங்கினார் மில்கா, மிக வேகமாக அனைவரையும் முந்தி ஓடி முதல் 200 மீட்டர்களை கடந்திருந்தார். இந்த முறை கனவு நிச்சயம் நிறைவேறும், ஒலிம்பிக்கில் பதக்கம் நிச்சயம் என இந்தியர்கள் அனைவரும் நினைக்க தொடங்கிய போது, ஓட்டத்தின் 250வது மீட்டரில் தனது வேகத்தை சற்றே குறைத்து ஒரு தவறை செய்தார் மில்கா. பறிபோனது கனவு, 0.1 நொடி வித்யாசத்தில் பதக்கத்தை தவரவிட்டார். நொறுங்கியது இந்தியர்களின் நெஞ்சம், ஆனால் இந்திய தடகளத்திற்கு தேவையான விதையை அன்றே விதைத்தவர் மில்கா.
2) P.T உஷா
இந்திய தடகளத்தின் ராணி, தங்க மங்கை என்று அழைக்கப்படுபவர். நூற்றுக்கும் அதிகமான சர்வதேச பதக்கங்களை வென்று குவித்தவர், பல தேசிய சாதனைகளை படைத்தவர், இவர் காலக்கட்டத்தில் ஆசிய அளவில் தடகளத்தில் மிக பெரிய ஆதிக்கத்தை செலுத்தியவர், 80களில் அனைவரையும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர். 16 வயதில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று, மிக இளம் வயதில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 0.01 மைக்ரோ நொடிகளில் ஒலிம்பிக் பதக்கத்தை தவறவிட்ட போது ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயமும் மீண்டுமொருமுறை நொறுங்கியது. பயோலி எக்ஸ்பிரேஸ் இன்றி இந்திய தடகளத்தின் வரலாறு அமையாது.
3) அஞ்சு பாபி ஜார்ஜ்
நீளம் தாண்டுதல் என்றால் இந்தியாவில் நம் நினைவுக்கு உடனே வருபவர் அஞ்சு பாபி ஜார்ஜ். உலக சாம்பியன்ஷிப்பில் முதல் பதக்கம் வென்ற இந்தியர். ஒரே ஒரு கிட்னி, பல்வேறு மருத்துவ பிரேச்சனைகளுடன் தடைகளை தாண்டி சாதித்தவர். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 2005ம் ஆண்டு மொண்டெ கார்லோவில் நடைபெற்ற இறுதி நீளம் தாண்டுதல் போட்டியில் 6.75 மீட்டர் நீளத்தை தாண்டி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அஞ்சு. இன்றுவரை உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஒரே இந்தியர்.
4) தியான் சந்த்
இந்தியா இதுவரை கண்டதிலேயே மிகச்சிறந்த ஹாக்கி வீரர். 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர்களில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றதற்கு மிக முக்கிய வீரராக இருந்தவர். இவர் களத்தில் இறங்கி கோல் அடித்த காலங்களே இந்திய ஹாக்கி வரலாற்றின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது. தியான் சந்திற்கு பெருமை சேர்க்க இவரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதியை இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம்.
5) தீபா மாலிக்
பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி. 2016 ரியோ பாராலிம்பிக் தொடரில் குண்டு எரிதல் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தவர். அந்நாள் வரை இந்தியாவிலிருந்து பாராலிம்பிக் தொடரில் மகளிர் பிரிவில் யாரும் பதக்கம் வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதியவர்.