நேற்று நடந்த உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா வென்னம், அதிதி சுவாமி மற்றும் பர்னீத் கவுர் அடங்கிய இந்திய மகளிர் அணி, மெக்சிகோவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. இந்தப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.


உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியானது ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில்,  நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மெக்சிகோவை எதிர்த்து விளையாடியது.


இந்திய அணி சார்பில் ஜோதி சுரேகா வென்னம், அதிதி சுவாமி மற்றும் பர்னீத் கவுரும், மெக்சிகோ அணி சார்பில் டாஃப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன் மற்றும் ஆண்ட்ரியா பெசெராவும் களமிறங்கினர். 


ஆட்டத்தின் தொடக்கம் முதலே நிதானத்துடன் விளையாடிய இந்திய மகளிர் அணி 235-229 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை வென்றது.


முன்னதாக, காலிறுதியில் சீனாவை 228-226 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் கொலம்பியாவை 220-216 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 






வெற்றிக்கு பிறகு பேசிய 27 வயதான ஜோதி சுரேகா, “வில்வித்தையில் இந்திய நாட்டிற்காக முதல் தங்கம் வென்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இன்னும் பல தங்கப் பதக்கங்களை வெல்ல விரும்புகிறோம்” என தெரிவித்தார்.


இதுவரை உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிலை: 


உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியானது முதல் முறையாக 1931 இல் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பின்னர், 1995 ஆம் ஆண்டு முதல், இதில் கூட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1981ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதல் முறையாக பங்கேற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில், ரிகர்வ் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றது. வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 9 முறை வெள்ளிப் பதக்கமும், 2 முறை வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது.


ஏமாற்றம் அளித்த இந்திய ஆண்கள் அணி: 


உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணியின் போட்டியில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தது. காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 230-235 என்ற புள்ளிக்கணக்கில் நெதர்லாந்து அணியிடம் வீழ்ந்தது. இந்திய தரப்பில் அபிஷேக் வர்மா, ஓஜல் தியோடலே, பிரதாமேஷ் ஜாவ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதே நேரத்தில், கலப்பு போட்டியிலும், அந்த அணி 154-153 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.