இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி செப்டம்பர் 10-ம் தேதி மேன்சஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வீரர்களின் பாதுகாப்பு கருதி இன்று நடைபெற இருந்த 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டி ரத்து செய்ததை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகள் இணைந்து இந்த முடிவை எட்டியுள்ளதாக ஐசிசி அறிவித்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை அடுத்து, செப்டம்பர் 19-ம் தேதி ஐபிஎல் தொடர் இரண்டாம் கட்ட போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 3 வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ, பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் மலான், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆல்-ரவுண்டர் வோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தபின், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் மான்செஸ்டரில் இருந்து துபாய் செல்ல இருந்தனர். இந்நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் லண்டனில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த சூழலில், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல், மற்றொரு பயிற்சியாளர் யோகேஷ் பர்மர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கடைசி போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதனால், மான்செஸ்டரில் இருந்து துபாய் செல்லும் வீரர்கள் கட்டாயமாக ஆறு நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளதால், இந்த மூன்று இங்கிலாந்து வீரர்களும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய வீரர்கள் மூவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருப்பது அந்தந்த அணிகளுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மாற்று வீரர்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அணிகள் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போது ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டது. ரசிகர்கள் இன்றி பாதுகாப்பான பயோ பபிள் சூழலில் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், பூட்டிய மைதானத்திற்கு உள்ளேயும் கொரோன நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதே போட்டிகள் நிறுத்தப்பட காரணமாக அமைந்தது. இதனால், இந்தியாவில் நடைபெற இருந்த மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவித்தது. செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க உள்ளது.