கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, பள்ளிக் கூடங்கள் பல மாதங்களாக மூடிக் கிடந்தன. ஆன்லைன் வகுப்புகளும், கல்வித் தொலைக்காட்சியும் அனைத்து விதமான மாணவர்களுக்கும் பயனளித்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேசமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் அடர்ந்த வனப்பகுதிகளிலும், மலைக் கிராமங்களிலும் வாழும் பழங்குடியின குழந்தைகள் கல்வி கற்பதே சாவலானது. அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி பயில்வது என்பது பெரும் சாவலாக உருவெடுத்துள்ளது.
மின்சாரம் இல்லை, செல்போன் இல்லை, தொலைக்காட்சி இல்லை, டவர் இல்லை என அடுக்கடுக்கான பிரச்சனைகள், மலைத்தொடர்களைப்போல நீள்கின்றன. இது கல்வியில் பின் தங்கியுள்ள அம்மாணவர்களுக்கு கொரோனா பரவல் மேலும் பின்னடைவை அளித்துள்ளது. இதனால் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறுவதும், குழந்தை திருமணங்கள் நடப்பதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையை மாற்ற பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் பழங்குடியின மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் கல்வி சுடரேற்றும் பணியில் ’சுடர்’ என்ற தன்னார்வ அமைப்பு ஈடுபட்டுள்ளது. பர்கூர், கடம்பூர், ஆசனூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் 8-ஆம் வகுப்பு வரையிலான பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக ’வீதி வகுப்பறைகள்’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பர்கூர் மலையில் கொங்காடை, அக்னிபாவி ஆகிய கிராமங்களிலும், கடம்பூர் மலைப்பகுதியில் பெரியகுன்றி, அணில்நத்தம், இந்திரா நகர், மாகாளிதொட்டி, உகினியம், நகலூர் ஆகிய கிராமங்களிலும், ஆசனூர் மலைப் பகுதியான கெத்தேசால், கானகரை என 10 பழங்குடியின கிராமங்களில் இந்த வீதி வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சர்வதேச எழுத்தறிவு தினத்தில் சுடர் அமைப்பு தொடங்கியுள்ளது.
கிராமங்களில் உள்ள வீதிகளிலேயே படித்த உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு மாலை நேரங்களில் பாடங்களை கற்பிக்கும் வகையில் வீதி வகுப்பறைகள் நடத்தப்படுகின்றன. இந்த வீதி வகுப்பறைகளில் பள்ளிப் பாடங்களுடன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, வனங்கள், சுகாதாரக் கல்வி, விளையாட்டு, இயற்கை வேளாண்மை குறித்தும் கற்றுத் தரப்படுகிறது. ஆசிரியர் என்ற அச்சமின்றி குழந்தைகள் உள்ளூரில் உள்ள நமது உரையாடல் மூலமாக கற்க இந்த வீதி வகுப்பறைகள் நல்ல தளமாக அமைந்துள்ளது என சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ் தெரிவிக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில்,”கொரோனா காரணமாக ஒன்றரை வருடங்களாக பள்ளி செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. சமவெளி மாணவர்கள் படிக்க வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மலைக் கிராம மாணவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. எந்த வித தொடர்பும் அற்ற மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வீதி வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளன
சமவெளியில் உள்ளவர்களை ஆசிரியர்களாக நியமித்தால், கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் உள்ளூரில் உள்ள படித்த இளைஞர்களை கொண்டு வீதிகளில் வகுப்புகள் நடத்தி வருகிறோம். இது மலைக்கிராம பழங்குடியின மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி மற்ற புத்தகங்களையும் படிக்க தூண்டும் வகையில் அக்கிராமங்களில் சிறுவர் நூலகங்களை அமைத்துள்ளோம். முதல் கட்டமாக 10 கிராமங்களில் வீதி வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி படிப்படியாக பல கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இந்த வீதி வகுப்பறைகள் பள்ளிகள் திறக்கும் வரை தொடர்ந்து செயல்படும்” என அவர் தெரிவித்தார்.
இத்தகைய முயற்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்தால், பழங்குடியின மாணவர்களின் கல்வி ஒளிமயமாகும்.