கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முக்கியமான ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா பங்கேற்றுள்ளார். இவர் குரேஷியா நாட்டைச் சேர்ந்த மேட் பேவிக் உடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியில் பங்கேற்றுள்ளார். சானியா-பேவிக் ஜோடி காலிறுதிச் சுற்று போட்டியில் கேப்ரியலா-ஜான் பியர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதல் செட்டில் சானியா-பேவிக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் சானியா-பேவிஜ் ஜோடி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றது. அடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் கேப்ரியலா-ஜான் பியர்ஸ் இணை சிறப்பாக செயல்பட்டு 6-3 என்ற கணக்கில் வென்றது. இரு ஜோடிகளும் தலா ஒரு செட் வென்று இருந்ததால் மூன்றாவது செட்டில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் அந்த செட் விறுவிறுப்பாக அமைந்தது.
மூன்றாவது செட்டில் சானியா-பேவிக் மற்றும் கேப்ரியலா-ஜான்பியர்ஸ் ஜோடி மாறி மாறி கேம்களை வென்று வந்தனர். ஒரு கட்டத்தில் இரு ஜோடிகளும் 5-5 என்று சமமாக இருந்தனர். இறுதியில் சானியா-பேவிக் ஜோடி 7-5 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை வென்றது. அத்துடன் 6-4,3-6,7-5 என்ற கணக்கில் போட்டியை வென்றது அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன்மூலம் முதல் முறையாக விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக இவர் விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் 2011,2013 மற்றும் 2015 ஆண்டுகளில் காலிறுதி சுற்று வரை முன்னேறியிருந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மகேஷ் பூபதி உடன் இணைந்து 2009 ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 2012 பிரஞ்சு ஓபனை வென்றுள்ளார். அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை ப்ரூனோ சார்ஸ் உடன் இணைந்து வென்று அசத்தியிருந்தார். தற்போது வரை சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். விம்பிளடன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையர் பட்டத்தையும் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைப்பார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்