இந்திய கிரிக்கெட்டில் காலம் எவ்வளவு விரைவாக மாறும் என்பதற்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளே சாட்சி. நேற்று வரைக்கும் விராட் கோலி என்ற இந்திய அணியின் கேப்டன் சர்வ அதிகாரமும் படைத்த ஒரு நபராகவும், இந்திய கிரிக்கெட்டின் முகமாக வளம் வந்து கொண்டிருந்தார். அவருக்காக இந்திய அணியின் பயிர்ச்சியாளரையே மாற்றும் எல்லைகளுக்கு சென்றது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆனால் டி20 உலகக்கோப்பையுடன் இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் விலகுவதாக அறிவித்த நொடி முதல் மாற்றங்களும் தொடங்கிவிட்டன. அதில் ஒரு முக்கியமான திருப்புமுனைதான் கும்ப்ளேவை மீண்டும் பயிற்சியாளராக்க விரும்பும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எண்ணம்.


இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர், முன்னாள் கேப்டன்.. இப்படிப்பட்ட பெருமைக்கெல்லாம் சொந்தகாரர்தான் இந்த ஜம்போ என அழைக்கப்படும் அனில் கும்ப்ளே. 2016ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பெற்றார். அப்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்த இந்திய கேப்டன் விராட் கோலி “அனில் கும்ப்ளேவை முழு மனதோடு வரவேற்கிறேன், உங்களின் பயிற்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். இந்திய கிரிக்கெட்டிற்க்கு மிக சிறந்த விஷயங்கள் காத்திருக்கிறது” என்றார். (பின்னர் கும்ப்ளே பதவியிலிருந்து ராஜினாமா செய்த பின் அந்த ட்வீட் டெலில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது)



இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், விராட் கோஹ்லி விளையாடும் ஆர்.சி.பி அணிக்கு கேப்டன், ஆலோசகர் என்றெல்லாம் அனில் கும்பிளே ஏற்கனவே பதவி வகித்து இருந்தார். அதனால் கோஹ்லி - கும்ப்ளே பார்ட்டனர்ஷிப் என்பது முதல் டைம் கிடையாது. அதை தொடர்ந்துதான் கோலி – கும்ப்ளே காம்பினேஷனில் 19 டெஸ்ட் மேட்ச்களில் தொடர்ச்சியாக இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் வலம் வந்தது. சரி எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு என்று நாம் அனைவரும் நினைக்குறப்ப தான், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான சீரிஸ் நடைப்பெற்றது. தொடரின் முதல் போட்டியை இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதன் பின்பு 2-1 என்ற கணக்கில் அந்த சீரிஸயும் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது வேறு விஷயம். ஆனால் அந்த சீரிஸின் முடிவில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவிற்க்கும் மோதல் என்ற செய்திகள் வெளிவந்தன. 3-வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை களமிறக்க கும்ப்ளே விரும்பியதாகவும், கோலிக்கு அந்த முடிவில் உடன்பாடு இல்லை. மேலும் கும்ப்ளே டிரஸ்ஸிங் ரூமில் இருந்து ஃபீல்டிங்கில் சில மாற்றங்களை சொல்லி அனுப்புவதாகவும், அதையெல்லாம் விராட் கோலி விரும்பவில்லை.


மேலும் இங்கிலாந்து சீரிஸ் முடிந்த உடனே ஒரு கேம்ப் வைக்கலாம் என்று கும்ப்ளே ஆலோசனை சொன்னார், ஆனால் விராட் கோலிக்கு அந்த ஐடியாவில் உடன்பாடு இல்லை. சின்ன பசங்களை டிரீட் செய்றது மாதிரி ஒரு இந்திய அணியின் வீரர்களை கும்ப்ளே டிரீட் செய்வதாக கடுப்பாகி இருக்கிறார் விராட் கோஹ்லி. இப்படியெல்லாம் செய்திகள் வெளிவந்தாலும், பிசிசிஐ வழக்கம் போல் இந்திய அணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்கின்றனர்.


அதே சலசலப்போடு 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அனில் கும்பிளே பயிற்சியாளராக தொடர்கிறார், அதில இந்திய அணி இறுதி போட்டிவரை சென்று பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது.



தோல்வியை தொடர்ந்து கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் இடையிலான தொடர்பு முற்றிலுமாக கட் ஆக, கும்ப்ளே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிசிசிஐக்கு அனுப்பினார். அதில் ”கேப்டன் விராட் கோலிக்கு என்னுடைய ஸ்டைல் ஆப் கோச்சிங்கில், மற்றும் நான் தலைமை பயிற்சியாளராக தொடர்வதிலும் சில எண்ணங்கள் இருக்கின்றன (கிட்டதட்ட விரும்பவில்லை) அதனால் இனி இருவரும் சேர்ந்து செயல்படுவது இயலாத காரியம்” என்று குறிப்பிடுகிறார்.


அதற்கு பிறகு விராட் கோலி அனுப்பியதாக சில Email தகவல்களை ஒரு செய்தி நிறுவனம் வெளியிடுகிறது. அதில் தொடர்ந்து பயிற்சியாளர் கும்ப்ளேவை அவரின் பதவியில் இருந்து அகற்ற பலமுறை இ-மெயில், மற்றும் குறுஞ்செய்திகளை விராட் அனுப்பியதாக குறிப்பிடபட்டிருந்தது. இதெல்லாம் பூதாகரமாக வெடிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி “கோலி ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்” என்றார். மேலும் ஒரு பயிற்சியாளர் யாராக இருக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் தீர்மானிப்பது இந்திய கிரிக்கெட்டிற்கு நல்ல விஷயம் இல்லை என்றெல்லாம் கருத்துகள் வெளிவந்தன.



மேலும் அந்த நேரத்தில் தலைவர் பொறுப்பில் இல்லாத கங்குலி, பிசிசிஐ-யின் வேறொரு பொறுப்பில் இருந்தார், அவரும் கும்ப்ளேவே தொடர்ந்து பயிற்சியாளராக இருக்க வேண்டும் என விரும்பினார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக கொண்டு வர வேண்டும் என்பதில் விராட் கோஹ்லி தீவிரமாக இருந்ததாகவும், முதலில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்த பின்பும், விண்ணப்பிக்காத ரவிசாஸ்திரியை பிசிசிஐ சட்டத்திட்டங்கள் எல்லாம் வளைக்கபட்டு பின்னர் பயிர்ச்சியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது.


இந்நிலையில் தான் வர இருக்கும் டி20 உலகக்கோப்பையுடன் ரவி சாஸ்திரியின் பதவி காலம் நிறைவடைய இருக்கிறது, மேலும் விராட் கோலியும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதனால் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆளை தேடிக்கொண்டு இருக்கிறது பிசிசிஐ. அவர் வேறு யாரும் இல்லை, அனில் கும்ப்ளே தான். தலைமை பயிர்ச்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளேவை விண்ணப்பிக்க சொல்லலாம் என்கின்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. தற்போது தலைமை பயிற்சியாளராக மீண்டும் கும்ப்ளே வந்தால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தொடரும் விராட் கோஹ்லி இந்த முறை என்ன செய்யபோகிறார், அதை எப்படி ஏற்றுக்கொள்வார்? விராட் கோலிக்கு அழுத்தம் கொடுக்கவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறார்களோ? இன்னும் எத்தனை நாட்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக விராட் கோலி தொடர்வார் என்கின்ற பல கேள்விகள் எழுகின்றன.