உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 


இதில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது.


இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் ’ரச்சின் ரவீந்திரா’ தன்னுடைய முதல் சதத்தை வெறும் 82 பந்துகளில் பதிவு செய்து அமர்க்களப்படுத்தினார். யார் இந்த ரச்சின் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்:


யார் இந்த ரச்சின் ரவீந்திரா?


இந்தியாவில் பிறந்து வெளிநாட்டு அணிக்காக கிரிக்கெட் விளையாடும் பலரை நாம் பார்த்திருப்போம். அதேபோல் தான் இவரும், இந்திய பெற்றோர்களுக்கு நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் நவம்பர் 18, 1999ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, ஒரு பொறியாளர். 



கிரிக்கெட் மீது தீராக் காதல்:


ரச்சினின் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை பிரியம். இவர் நியூசிலாந்து நாட்டில் குடியேறுவதற்கு முன்னதாக அவரது சொந்த ஊரான பெங்களூருவில் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  கிருஷ்ணமூர்த்தி பெங்களுருவின் புகழ்பெற உயிரியலாளர் டாக்டர்.டி.ஏ. பாலகிருஷ்ண அடிகாவின் பேரன் ஆவார். இப்படி தந்தை கிரிக்கெட் மீது கொண்ட தீராக் காதலை மகனுக்கு கடத்த,மகனோ இன்று ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.


அறிமுகம் எப்போது?


இளம் வீரரான ரச்சின் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கான்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் நியூசிலாந்து அணியில் முதன் முதலில் அறிமுகமானார்.




அது என்ன ரச்சின்?


கிரிக்கெட் கடவுள் என்று  ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் மற்றும்  டெஸ்ட் கிரிக்கெட்டி சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் தீவிர ரசிகர் இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி. அதனால் முதலில் சச்சின் என்று தனது மகனுக்கு பெயர் வைக்கலாம் என்று இருந்தவர் ராகுல் டிராவிட்டையும் பிடிக்கும் என்பதால் அவரின் முதல் எழுத்தை சேர்த்துக் கொண்டு சச்சினின் பெயரையும் இணைத்து ‘ரச்சின் ரவீந்திரா’ என்று வைத்து விட்டார்.


நியூசிலாந்து அணியின் மீது கொண்ட அன்பு:


கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி  நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்தும்  விளையாடியது. உலகமே உற்று நோக்கிய இந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  ரச்சின் இந்த ஆட்டத்தை பெங்களூரிவில் உள்ள ஒரு கிளப்பில் அமர்ந்த படி பார்த்து கொண்டிருக்க, நியூசிலாந்து அணியின் தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது அவருக்கு வயது 19. அன்று முடிவு செய்திருக்கிறார். இங்கிலாந்து அணியை பந்தாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது. 


இங்கிலாந்தை பகை தீர்த்த ரச்சின்:










இச்சூழலில் தான் இன்று (அக்டோபர் 5) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஒரு சூறாவளியைப் போல் சுற்றி சுற்றி அடித்திருக்கிறார். மொத்தம் 96 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 11 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 123 ரன்களை அடித்திருக்கிறார். அதிரடியால் தன்னுடைய உலகக்கோப்பை பயணத்தை தொடர்ந்து இருக்கும் ரச்சினை தற்போது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


 


மேலும் படிக்க: ENG Vs NZ Match Highlights: கான்வே ரவீந்திரா மிரட்டல் சதம்; நடப்புச் சாம்பியனை பழி தீர்த்து நியூசிலாந்து அபார வெற்றி


மேலும் படிக்க: ODI World Cup 2023: உலகக்கோப்பையின் முதல் அரைசதம்...! அதிரடி காட்டிய ஜோ ரூட்!