2003-ம் ஆண்டை அடுத்து, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வந்த நியூசிலாந்து அணி ஒரு பந்துகூட வீசப்படாமல் காலவரையின்று போட்டியை ஒத்திவைத்து சொந்த நாடு திரும்பியுள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருந்தது. இன்று தொடங்க இருந்த முதல் ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி, ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கடைசி நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டது.
பாகிஸ்தான் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாததே காரணம் என சுட்டிக்காட்டி சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டது நியூசிலாந்து. போட்டி தொடங்குவதற்கு முன்பு, மைதானத்தில் குண்டு இருப்பதாக வெளியான தகவலையொட்டி, வீரர்கள் அனைவரும் ஹோட்டல் ரூம்களிலேயே தங்க வைக்கப்பட்டனர். இதனால் ரசிகர்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட்டைச் சேர்ந்த அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டதில், குண்டு வைத்திருப்பது தொடர்பான தகவல் போலியான செய்தி என உறுதி செய்யப்பட்டது. இதனால், ராவல்பிண்டி மைதானம் போட்டி நடைபெறுவதற்கு பாதுகாப்பான இடமே என்று முடிவு செய்யப்பட்டது.
எனினும், பாகிஸ்தானில் நியூசிலாந்து வீரர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என நியூசிலாந்து அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகலும், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இருந்த பாதுகாப்பு ஆலோசகர்களின் ஆலோசனையின் தொடர்ச்சியாகவும், நியூசிலாந்து அணி சுற்றுப்பயணத்தை ரத்து செய்து கொள்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் சென்றிருந்தபோதும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருந்தது. 2002-ம் ஆண்டு நடந்த அந்த சம்பவத்தை அடுத்து, 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டது வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம். என்ன நடந்தது அப்போது?
2002, கராச்சி குண்டு வெடிப்பு
கடந்த 2002-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருந்தது. முதல் டெஸ்ட் போட்டி முடிந்து இரண்டு டெஸ்ட் போட்டி தொடங்க இருந்த நிலையில், கராச்சியில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடித்தது. இதில், நூலிழையில் பாகிஸ்தான் வீரர்கள் உயிர் தப்பினர். நியூசிலாந்து வீரர்கள் காயமின்றி மீட்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்ட தொடர் மீண்டும் 2003-ம் ஆண்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுவே, நியூசிலாந்து அணி கடைசியாக பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடிய தொடர் ஆகும்.
2009, லாகூர் குண்டு வெடிப்பு
2009-ம் ஆண்டு, மார்ச் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இலங்கை கிரிக்கெட் அணி. மஹிலா ஜெயவர்தனே தலைமையிலான இலங்கை அணி லாகூர் கடாஃபி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தது. போட்டியின் இரண்டாவது நாளன்று, போட்டியில் விளையாடுவதற்காக மைதானத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தது இலங்கை அணி. அப்போது ஆர்.பி.ஜிகளோடு தயார் நிலையில் வந்த தீவிரவாதிகள், தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த இலங்கை வீரர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த பயங்கர சம்பவம் நடந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பாகிஸ்தானில் இலங்கை அணி கிரிக்கெட் விளையாடியது.