மேற்கு வங்க ஆளுநர் இல கணேசன் பெங்களூரு எஃப்சி மற்றும் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை தள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து பலரும் சமூக வலைத்தளங்களில் சுனில் சேத்ரிக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் தலைமையின் கீழ், பெங்களூரு எஃப்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் தங்கள் முதல் டுராண்ட் கோப்பை பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்தது. 2022 டுராண்ட் கோப்பையின் இறுதிப் போட்டியில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எஃப்சி, மும்பை சிட்டி எஃப்சியை வீழ்த்தி தனது கொல்கத்தாவின் புகழ்பெற்ற சால்ட் லேக் ஸ்டேடியத்தில் கோப்பை வென்றது.
பெங்களூர் எஃப்சி கடந்த சில மாதங்களில் சிம்லா டிராபி மற்றும் பிரசிடென்ட் கோப்பையை வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது டுராண்ட் கோப்பையையும் வென்று கெத்து காட்டியது. மேலும், இதற்கு முன்னதாக ஐ-லீக் (2014 மற்றும் 2016), ஃபெடரேஷன் கோப்பை (2015 மற்றும் 2017), சூப்பர் கோப்பை (2018) மற்றும் இந்தியன் சூப்பர் லீக் (2019) பட்டங்களையும் அள்ளியுள்ளது.
இந்தநிலையில், வெற்றிக்கு பிறகு கேப்டன் சுனில் சேத்ரியிடம் கோப்பையை வழங்குவதற்கால முக்கிய பிரமுகர்கள் ஒன்றாக நின்றனர். அந்த முக்கிய பிரமுகர்களில் மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனும் ஒருவர். அப்போது, சுனில் சேத்ரி கோப்பையை பெறும்போது தான் தெரியவில்லை என்று எண்ணிய மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசன் அனைவரும் முன்னிலையிலும் சுனில் சேத்ரியை கையை கொண்டு பின்னாடி தள்ளினார். இதனால் சேத்ரி ஓரமாக நின்று கோப்பை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளிவர, இதை பார்த்து ஆத்திரமடைந்த பலரும் சுனில் சேத்ரிக்கு ஆதரவாகவும், இல. கணேசனுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தனது ஆதரவை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில், “"அதெல்லாம் ஒருவித தப்பு!! மன்னிக்கவும் @chetrisunil11 நீங்கள் இதை விட மிகவும் சிறந்தவர்!!” என பதிவிட்டுள்ளார்.