பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்காரஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சக போட்டியாளரான ஜோகோவிச்சையே மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி:


நடப்பாண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், நேற்று இரவு அரையிறுதிப்போட்டிகள் நடைபெற்றன.


ஜோகோவிச் - அல்காரஸ் மோதல்:


நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில், முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சை, தற்போதையை நம்பர் ஒன் வீரரான ஸ்பானிஸை சேர்ந்த வெறும் 20 வயதே ஆன கார்லோஸ் அல்காரஸ் எதிர்கொண்டார். இரண்டு முன்னணி வீரர்கள் மோதுவதால் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து இருந்தது. ஆரம்பம் முதலே இரண்டு வீரர்களும் மாறி மாறி போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர். 


இதயங்களை வென்ற அல்காரஸ்:


போட்டியின் முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினாலும், தனது அபார ஆட்டத்தால் இரண்டாவது செட்டை அல்காரஸ் 7- 5 என கைப்பற்றினார். குறிப்பாக அந்த செட்டில் அவர் அடித்த ஷாட் ஆனது, ரசிகர்களை மட்டுமின்றி சக போட்டியாளரான ஜோகோவிச்சை கூட மெய் சிலிர்க்க வைத்தது அந்த ஷாட்டை கண்டு ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல்களால் மைதானமே அதிர்ந்தது.


அல்காரஸ் அடித்த அசகாய ஷாட்:


அதன்படி, ஜோகோவிச் வலைக்கு அருகே ஒடு டிராப் ஷாட்டை இறக்கினார். களத்திற்கு உள்ளே ஓடிச்சென்று அல்காரஸ் அதை வெற்றிகரமாக எதிர்தரப்பிற்கு அனுப்ப, ஜோகோவிச் உடனடியாக அதை டீப் ஷாட்டாக அடித்தார்.  இதனால் அல்காரஸ் மீண்டும் களத்தின் எல்லைக் கோட்டிற்கு அருகே ஓட வேண்டியது இருந்தது. ஒருவழியாக பந்தை எப்படியும் ஜோகோவிச்சிற்கு நேராக அடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நினைத்து பார்க்க முடியாதபடி ஒரு ஷாட்டை அடித்து அசத்தினார். அதன்படி, களத்தில் சறுக்கியவாறு வந்த அல்காரஸ் நேர்த்தியான ஃப்ளிக் ஷாட் மூலம், பந்தை ஜோகோவிச்சிற்கு வலதுபுறமாக விரட்டி பாயிண்ட் எடுத்து அசத்தினார்.






பெடரரை நியாபகப்படுத்திய அல்காரஸ்:


இந்த ஷாட்டை கண்டு மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் பிரமித்துபோய் கைதட்டி, அல்காரஸை உற்சாகப்படுத்தினார்.  மறுமுனையில் நின்றிருந்த ஜோகோவிச் என்ன நடந்தது என்பதை உணர்ந்தபிறகு, அவரே மெய்சிலிர்த்து போய் தோல்வியை ஒப்புக்கொள்வதை போல கைகளை உயர்த்திகொண்டு சிரித்தவாறு சென்றார். தான் செய்ததையே நம்ப முடியாமல் அல்காரஸ் மகிழ்ச்சியில் திளைத்தார். இந்த ஷாட் ஆனது 2006ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதியில், டேவிட் நல்பாண்டியனுக்கு எதிராக மற்றொரு டென்னிஸ் ஜாம்பவானான பெடரர் அடித்த ஷாட்டை நினைவூட்டியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.






 


அல்காரஸ் தோல்வி:


அடுத்தடுத்து அதிரடியாக விளையாட தொடங்கியபோது, காலில் ஏற்பட்ட வலியால் அல்காரஸ் அவதிப்பட்டார். இருப்பினும் விடாது போராடினார். ஆனால், ஜோகோவிச்சின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மூன்றாவது மற்றும் நான்காவது செட்டை 6-1, 6-1 என அல்காரஸ் இழந்தார்.