டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர். இவர் சமீபத்தில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவருக்கு பல்வேறு நபர்களும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏடிபி தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. 


 


அந்த வீடியோவில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஃபெடரருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், “உங்களுக்கு வாழ்த்து அனுப்புவதில் எனக்கு மிகவும் பெருமையான ஒன்று. நீங்கள் டென்னிஸ் விளையாடுவதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் போது கிடைத்தது. அப்போது உங்களுக்கு அவ்வளவு பேர் ஆதரவாக இருந்ததை பார்த்து நான் மிகவும் பிரம்மிப்பு அடைந்தேன். களத்தில் உங்களுடைய விளையாட்டும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை எப்போதும் டென்னிஸ் விளையாட்டில் நீங்கள் ஒரு சிறந்த வீரர். உங்களுடைய வாழ்வில் அடுத்த பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் உங்களுடைய குடும்பத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். 


 






அவரின் இந்த வீடியோவை ரோஜர் ஃபெடரர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். அதில், “நன்றி விராட் கோலி.. விரைவில் இந்தியா வருவேன்” எனத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் விராட் கோலிக்கு டென்னிஸ் வீரர் ஃபெடரர் நன்றி தெரிவித்துள்ளது வேகமாக வைரலாகி வருகிறது. 


 






24 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் ரோஜர் ஃபெடரர் 3வது இடத்தில் உள்ளார். இவர் அதிகபட்சமாக 8 முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 8 முறை வென்ற ஒரே வீரர் ரோஜர் ஃபெடரர் தான். இவர் கடந்த வாரம் நடைபெற்ற லெவர் கோப்பை டென்னிஸ் தொடரில் ரஃபேல் நடால் உடன் இணைந்து இரட்டையர் பிரிவில் இவர் விளையாடினார். அத்துடன் அவர் சர்வதேச டென்னிஸ் தொடர்களிலிருந்து ஓய்வு பெற்றார்.