இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது இந்த முடிவு குறித்து அவர் விரிவான விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்சி பொறுப்பில் கவனம் செலுத்துவதற்காகவும், டி-20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் கேட்படன் பொறுப்பை ஏற்பதாகவும், அதன் பின் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். நீண்ட ஆலோசனைக்குபின் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல தவறினால், டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகிவிடுவார் என்றும், துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாகவும் ஊடங்களில் தகவல் வெளியானது. தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும், இழந்த தனது பார்மை மீட்பதற்காகவுமே கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், டி-20 உலககோப்பை போட்டித் தொடர் முடிந்த பிறகு விராட் கோலி இதை அறிவிப்பார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியானதாக தனியார் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது. 


இந்த தகவலை முற்றிலுமாக மறுத்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ”கேப்டன்சியை பகிர்ந்தளிக்கும் எந்தவொரு திட்டமும் இல்லை. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 என மூன்று ஃபார்மாட்களிலும் இந்திய அணி கேப்டனாக விராட் கோலியே தொடர்வார்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில், விராட் கோலி தனது முடிவை அறிவித்திருப்பது எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மூன்று ஃபார்மேட்களிலும் கேப்டன்சியை பகிர்ந்து அளிக்கும் திட்டத்தில் பிசிசிஐ உறுதியாக இருந்திருக்கும் என்பதால், கோலிக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கலாம். இந்நிலையில்தான், கோலி தனது முடிவை அறிவித்திருப்பார் என்று தெரிகிறது.






இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அணிக்காக விளையாடுவதில் மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டனாகவும் வழிநடத்திச் சென்றது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அணி கேப்டனாக நான் பொறுப்பு வகிக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உதவியாளர்கள், தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் என ஒவ்வொருவரின் உதவியும் இல்லாமல் என்னால் இந்த நிலையை எட்டி இருக்க முடியாது. குறிப்பாக, இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் எனது நன்றிகள். 


கடந்த 8-9 வருடங்களாக டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மூன்று ஃபார்மேட்களிலும் விளையாடி வருவதும், கடந்த 5-6 ஆண்டுகளாக மூன்று ஃபார்மேட்களிலும் கேப்டன் பொறுப்பு வகிப்பதற்கும் அதிக வேலைபாடு தேவைப்படுகிறது. இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் கேப்டனாக முழுமையாக கவனம் செலுத்தும் முன், சில காலம் அவகாசம் தேவைப்படுகிறது. ஒரு டி-20 கேப்டனாக எனது முழு உழைப்பை வழங்கியுள்ளேன். இனிமேலும், டி-20 பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். 


உறுதியாக இந்த முடிவை எடுப்பதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. எனக்கு மிகவும் நெருக்கமான ரவி அண்ணன் (ரவி சாஸ்திரி), ரோஹித் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தப் பிறகு, டி-20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு எனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம் என முடிவு செய்துள்ளேன். இவ்விருவரும், இந்திய அணியின் தலைமை பொறுப்பு குழுவில் முக்கியமானவர்கள். மேலும் இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜே ஷா, தலைவர் கங்குலி மற்றும் அணி தேர்வாளர்களிடம் பேசியுள்ளேன். தொடர்ந்து இந்திய அணிக்கும், இந்திய அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட உறுதி கூறுகிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.