இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம் இந்திய அணி
இன்றைய சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர்களை கொண்ட குழுவாக இயங்கி வருகிறது. 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து இளம் படையினரை உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது. ஒருநாள், டெஸ்ட், டி20 ஆகிய வடிவங்களுக்கு தனித்தனியே கேப்டன், வீரர்கள் என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப மெருகேற்றப்படுகின்றனர்.
இப்படியான நிலையில் இந்திய அணியில் மூத்த வீரர்களாக முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இருவரும் டி20, டெஸ்ட் ஆகிய வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வுப் பெற்று விட்டனர்.
ஃபார்ம் இன்றி தவிப்பு
இதனிடையே 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒருநாள் தொடரில் தான் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பினர். 5 மாதங்கள் கழித்து இருவரும் களமிறங்கியதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் ரன் எதுவும் எடுக்காமல் அதிர்ச்சி கொடுத்தார். ரோகித் சர்மாவும் முதல் போட்டியில் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் திணறினார். எனினும் அடுத்தடுத்த ஒரு சதம், அரைசதம் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் இருவரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக்கோப்பை போட்டி வரை தாக்குப் பிடிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. அவர்களின் எதிர்காலம் பற்றிய கேள்வி எழுந்துள்ள நிலையில் பிசிசிஐ, ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற வேண்டுமென்றால் இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணியுடனான தொடரில் சொதப்பியதால் அவர்களின் உடற்தகுதி மிகப்பெரிய அளவில் கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தேர்வு செய்ய வேண்டுமென்றால் விஜய் ஹசாரே டிராபியில் இருவரும் விளையாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா விஜய் ஹசாரே டிராபியில் விளையாட மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் விராட் கோலி இதுவரை பதிலளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பின் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் ரஞ்சி டிராபியில் விளையாடினர். பிசிசிஐ தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர், தேசிய அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டுமென்றால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாண்டு ஃபார்மை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.