நடிகர் வடிவேலுவின் மிகச்சிறந்த காமெடி கேரக்டரான கண்ணாத்தாள் படத்தில் இடம்பெற்ற சூனா..பானா உருவான விதம் பற்றி நாம் காணலாம். 

Continues below advertisement

பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை சில கேரக்டர்கள் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு ஐகானிக் விஷயமாக இருக்கும். நம்மையோ அல்லது நம்மை சுற்றியிருப்பவர்களையோ உருவகப்படுத்தும் வகையில் அந்த கேரக்டர் இருக்கும். அப்படியான ஒரு கதாபாத்திரம் தான் நடிகர் வடிவேலு நடித்த சூனா..பானா, அதாவது சுப்பையா பாண்டியன். இந்த கேரக்டர் 1998 ஆம் ஆண்டு வெளியான கண்ணாத்தாள் படத்தில் இடம் பெற்றிருக்கும். 

இயக்குநர் பாரதி கண்ணன் இயக்கிய இந்த படத்தில் கரண், மணிவண்ணன், நீனா, வடிவுக்கரசி, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். குஷ்பூ சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். ஆன்மிக படமாக அறியப்படும் கண்ணாத்தாள் இன்றளவு ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ளது. இதில் வடிவேலுவின் காமெடி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த கேரக்டர் ஒரு உண்மையான மனிதரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்பது பலரும் அறியாத விஷயமாகும். 

Continues below advertisement

ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் பாரதி கண்ணன், ‘சூனா பானா கேரக்டர் இன்றைக்கும் அனைவராலும் பேசப்பட காரணம் அது ஒரு ஒரிஜினல் கேரக்டர். எங்க ஊரில் வாழ்ந்த என்னுடைய சொந்தக்காரர் தான் அவர். அவர் பெயர் சுப்பையா பாண்டியன். காலையிலேயே அவர் ஒரு அரிவாள், ஒரு துண்டு எடுத்துக்கொண்டு மிகப்பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு வருவார். என்ன மாமா எங்க கிளம்பிட்டீங்க என கேட்டால் திருட போறேன்னு அசால்ட்டா சொல்வார்.

எங்கேயாவது மாட்டி விட்டார் என்றால், அவரை பிடித்தவரிடம் பேசி ஏதோ அவர் திருடியது மாதிரியும், இவர் பிடித்தவர் மாதிரியும் மாற்றி விடுவார். அதாவது ஒரு தோட்டத்துக்காரரிடம் சிக்கிக் கொண்டால் அவரிடம் இப்படி யாராவது திருடினால் என்ன செய்வாய், ஏன் காய்கறி எல்லாம் இவ்வளவு சிறிதாக இருக்கு என மனம் இளகும்படி பேசுவார். இதெல்லாம் தப்பு என தோட்டத்துக்காரன் பேசினால், நான் என்ன லட்ச ரூபாய் பொருளையா தூக்கிட்டு போறேன் என நியாயமாக பேசி, உனக்கு ஒன்று என்றால் இந்த சூனா..பானா உயிரை கொடுப்பான் என தெரிவிப்பார். 

இதை முன்னோட்டமாக கொண்டு தான் அந்த கேரக்டரை நான் உருவாக்கினேன். அந்த கேரக்டரில் நடிக்க வடிவேலுவை புக் செய்தபோது அவர் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். 10 நாட்கள் ஷூட்டிங் என ரூ.2 லட்சம் சம்பளம் பேசி நடிக்க வைத்தேன். அந்த படம் வெளியான பிறகே ஊருக்கு ஒரு சுனா..பானா இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரிய வந்தது" என இயக்குநர் பாரதி கண்ணன் கூறியிருந்தார்.