இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், அன்ஷூ மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் கைசர்கஜ்ச் எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் தொல்லை மற்றும் உடல்ரீதியான துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். 


பஜ்ரங் புனியா, வினேஷ் போகர் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் இன்று காலை இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஆரம்பத்தில் எதற்காக நடந்தது என்று தெரியவில்லை. 


இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், “ இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பல மல்யுத்த பெண்கள் வீராங்கனை மற்றும் பயிற்சியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இன்று இந்த உண்மையை நான் வெளியே சொல்கிறேன். ஆனால், நாளை நான் உயிருடன் இருப்பேனா, இல்லையா என்பது தெரியாது. என்னுடன் அமர்ந்திருக்கும் சில பெண் மல்யுத்த வீராங்கனைகளும் இந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். நாங்கள் எங்களுக்காக போராடவில்லை. மல்யுத்தத்தை காப்பாற்ற போராடுகிறோம். 






இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரால் நான் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என்று வினேஷ் போகட் கூறினார். எனக்கு தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. பிரிஜ் பூஷன் சரண் சிங் நான்கு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவர்கள் மீது புகார் வரும்போதெல்லாம் நேராக சென்றால் கொலைமிரட்டல் விடுக்கப்படுகிறது.அதேபோல், பயிற்சியாளர்கள் எங்களை தினமும் சித்திரவதை செய்கிறார்கள். பயிற்சியாளரின் அனுமதி இல்லாமல் மல்யுத்த வீரர்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “மல்யுத்த வீரர்களுக்கு ஸ்பான்சர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. மல்யுத்த வீரர்களை சென்றடைய வேண்டிய நிதி உதவி அவர்களை சென்றடையவில்லை.இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது, ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கும் மல்யுத்த வீரர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக யாரும் எதுவும் கூற முடியாது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்” என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.






இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கூறியதாவது, “டெல்லி காவல்துறை மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்த வழக்கில் உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும். WFI தலைவரை கைது செய்ய வேண்டும் மற்றும் இந்த விவகாரத்தில் பெயர் வந்த பயிற்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.