உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் பெங் ஷூவாய். உலக தரவரிசைப் பட்டியலில் முதன்முறையாக முதலிடம் பிடித்த சீன டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் விம்பிள்டன், பாரீஸ் ஓபன் என ஒற்றையர் பிரிவில் இருமுறையும், இரட்டையர் பிரிவில் 22 முறையும் சாம்பியன் பட்டம் வென்றவர்.
35 வயதான பெங் ஷூவாய் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளப் பக்கமான வெய்போவில் சீனாவின் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான ஜாங் கயோலி மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவிட்டார். அந்த பதிவில், ஜாங்கயோலி 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை தன்னை கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட சில மணிநேரங்களிலே அந்த பதிவு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதன் ஸ்கிரீன்ஷாட்கள் உலகம் முழுவதும் பரவியது.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை அளித்த பிறகு டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் மாயமானதாக தகவல் வெளியானது. அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த செய்தி நிறுவனம் ஒன்றும் அதை உறுதி செய்தது. அவர் மாயமானது குறித்து பரபரப்பு இருந்து வந்த நிலையில், இன்று வெளியான வீடியோ ஒன்றில் பெங் ஷூவாய் தோன்றியுள்ளார்.
பிரபல சீன பத்திரிகையின் ஆசிரியர் ஹூ ஜின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், ஒரு உணவு விடுதியில் பெங் ஷூவாய் இருக்கிறார். மேலும், அந்த வீடியோவில் பெங் ஷூவாயின் பயிற்சியாளரும் உடனிருக்கிறார. இருவரும் அந்த உணவகத்தில் அமர்ந்து இரவு உணவு சாப்பிடுகிறார்கள். மேலும், அந்த சீன பத்திரிகை ஆசிரியர் இந்த வீடியோ கடந்த சனிக்கிழமை இரவு எடுக்கப்பட்டது என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங் ஷூவாய் தான் நலமாக இருப்பதாக கூறும் வகையில் மின்னஞ்சல் அனுப்பியது போன்று சீன அரசு செய்தி வெளியிட்டது. ஆனால். அந்த மின்னஞ்சல் குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். ஜப்பானைச் சேர்ந்த நவோமி எங்கே பெங் ஷூவாய் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில் பெங் ஷூவாய் உணவகத்தில் சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சீனாவின் பீஜிங்கில் நடைபெற உள்ள சீன ஓபன் தொடருக்காகதான் பீஜிங்கில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், உலக டென்னிஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் இந்த வீடியோ மிகவும் பழையது என்றும் கூறியுள்ளனர்.
சீனாவில் ஜின்-பிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சீன அரசாங்கத்தின் மீதோ, அதிகாரத்தில் உள்ள சீன தலைவர்கள் மீதோ குற்றம் சுமத்துபவர்களை மாயமாகி வருவது வாடிக்கையாகி வருகிறது. உலகின் பெரும் பணக்காரர் ஜாக்மாவும் சில காலம் இதேபோல மாயமாக இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளி உலகில் தோன்றினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்