சர்வதேச செஸ் உலகில் கடந்த ஒரு மாதமாக கிராண்ட் மாஸ்டர் ஒருவர் மீது புகார் எழுந்து வருகிறது. இது தொடர்பாக செஸ்.காம் என்ற இணையதளம் நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது கிராண்ட் மாஸ்டர் ஹன்ஸ் நிமன். இவர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சின்கியூஃபீல்ட் கோப்பை தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். அந்தப் போட்டிக்கு பிறகு கார்ல்சன் தொடரிலிருந்து விலகினார். 


அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு தொடரில் மேக்னஸ் கார்ல்சன் ஹன்ஸ் நிமனை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் ஒரே ஒரு நகர்த்தலுக்கு பின்பு உலக சாம்பியன் போட்டியிலிருந்து விலகினார். இதுகுறித்து அந்தத் தொடர் முடிந்த பிறகு மேக்னஸ் கார்ல்சன் விளக்கமளித்தார். அதில், “ஹன்ஸ் நிமன் நிறையே போட்டிகளில் ஏமாற்றி விளையாடி வருவதாக எனக்கு சந்தேகம் உள்ளது” எனத் தெரிவித்தார். 






இந்த விவகாரம் தொடர்பாக பிரபல செஸ் வலைதளமான செஸ்.காம் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சுமார் 100 போட்டிகள் வரை ஹன்ஸ் நிமன் ஏமாற்றி விளையாடியுள்ளது தெரியவந்துள்ளது. அதில் பல்வேறு முக்கியமான தொடர் போட்டிகளில் ஹன்ஸ் நிமன் ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதன்காரணமாக அவருடைய செஸ்.காம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஹன்ஸ் நிமன் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், “நான் என்னுடைய இளமை பருவத்தில் இரண்டு முறை ஏமாற்றியுள்ளேன். அதாவது என்னுடைய 12 மற்றும் 16 வயதில் ஏமாற்றியிருந்தேன். அதன்பின்னர் அப்படி செய்யவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க நிர்வாணமாக கூட விளையாட தயாராக உள்ளேன் ” எனக் கூறியிருந்தார். 






இந்த விவகாரம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் செஸ்.காம் ஆய்வின் முடிவு ஹன்ஸ் நிமன் கூறிய கருத்திற்கு மாறாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச செஸ் கூட்டமைப்பான எஃப்.ஐ.டி.இயும் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் செஸ் வட்டாரங்களில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்கள் அதிகமாகியுள்ள சூழலில் இதுபோன்ற சில வீரர்கள் செய்வது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.