டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்ததில் இந்திய ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் வென்று இருந்தது. ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கமும் தீபக் புனியா மற்றும் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கமும் வென்று இருந்தனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரை டாட்டா மோட்டர்ஸ் நிறுவனம் இந்திய மல்யுத்த சங்கத்திற்கு ஸ்பான்சர்ஷிப் அளித்து வந்தது. 


இந்நிலையில் தற்போது இந்திய மல்யுத்த சங்கத்திற்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க உத்தரப்பிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவர் பிரஜ்பூஷண் சிங் பிடிஐ நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார். அதில், “ஒரு சிறிய மாநிலமாக இருந்து கொண்டு ஒடிசா பல ஆண்டுகளாக இந்திய ஹாக்கி விளையாட்டிற்கு ஸ்பான்சர்ஷிப் கொடுத்து வருகிறது. அதனால் உத்தரப்பிரதேசம் மாதிரியான ஒரு பெரிய மாநிலம் மல்யுத்தத்திற்கு ஸ்பான்சர்ஷிப் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இதை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கூறினோம். அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். 






அதன்படி 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் வரை ஆண்டிற்கு 10 கோடி ரூபாய் என மொத்தமாக 30 கோடி கேட்டுள்ளோம். அதன்பின்னர் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் வரை ஆண்டிற்கு 15 கோடி விகிதம் மொத்தமாக 60 கோடி கேட்டுள்ளோம். அதைத் தொடர்ந்து 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் வரை ஆண்டிற்கு 20 கோடி விகிதம் மொத்தமாக 80 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். மொத்தமாக 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் வரை மல்யுத்தத்திற்கு உத்தரப்பிரதேச அரசு 170 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் கிடைக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கும் மல்யுத்த வீரர்கள் மட்டுமல்லாமல் ஜூனியர் பிரிவு வீரர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும்” எனக் கூறியுள்ளார். இதற்கு முன்பாக டாட்டா மோட்டர்ஸ் குழுமம் மல்யுத்த விளையாட்டிற்கு 2018ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு 12 கோடி ரூபாய் ஸ்பான்சர்ஷிப் அளித்து வந்தது. 




இந்தியாவில் மாநிலம் ஒன்று ஒரு விளையாட்டிற்கு ஸ்பான்சர்ஷிப் செய்வது இது முதல் முறையல்ல. 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒடிசா மாநிலம் இந்திய ஹாக்கி அணிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு ஹாக்கி மைதானம் உள்ளிட்ட பல வளர்ச்சி அடைந்துள்ளன. அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆடவர் அணி வெண்கலப்பதக்கம் வென்றது. மகளிர் அணி 4-வது இடத்தை பிடித்து அசத்தியது. இதைத் தொடர்ந்து ஒடிசா அரசு ஹாக்கி விளையாட்டிற்கு அளித்து வரும் ஸ்பான்சர்ஷிப்பை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: நான் சொல்லாததை வெச்சு கதை கட்டாதீங்க.. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா காட்டம்..!