டெட் கவ் கல்லி பேக்யார்ட் மாஸ்டர்ஸ் அல்ட்ரா மராத்தான் 2023 இல், ஆஸ்திரேலிய ஓட்டப்பந்தய வீரர் பில் கோர், ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
டெட் கவ் கல்லி பேக்யார்ட் மாஸ்டர்ஸ்
டெட் கவ் கல்லி பேக்யார்ட் மாஸ்டர்ஸ் அல்ட்ரா மராத்தான், அதன் தனித்துவமான வடிவமைப்பிற்குப் பெயர்பெற்றது. இந்த மாரத்தானுக்கு எல்லைக் கோடுகள் கிடையாது. 6.7 கிமீ தூரம் கொண்ட ஒரு பாதை உண்டு, அது தொடங்கிய இடத்திற்கே திரும்பி வரும். இந்த சுழலை திரும்ப திரும்ப சுற்ற வேண்டும், அதுவும் 1 மணி நேரத்திற்கு குறைவாக சுற்ற வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுத்துக்கொள்பவர்கள் அந்த சுற்றோடு வெளியேறுவார். இப்படி ஒவ்வொருவராக வெளியேற கடைசியாக இருக்கும் நபர்தான் வெற்றியாளர். இந்த போட்டியில் பில் கோர் 102 முறை அந்த லூப்பை சுற்றி போட்டியை வென்றுள்ளார்.
நான்கு நாட்கள் தொடர்ந்து ஓடிய பில் கோர்
இந்த நிகழ்வு ஜூன் 17, 2023 அன்று ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு வடமேற்கே 112 மைல் தொலைவில் அமைந்துள்ள நானாங்கோ என்ற பண்ணையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட பில் கோர் நான்கு நாட்கள் தொடர்ந்து ஓடியுள்ளார். நான்கு நாட்களில் சுமார் 685 கிமீ தூரம் கடந்து, 102 முறை பிரமிக்க வைக்கும் வகையில் லூப்பை சுற்றியுள்ளார். 2020 இல் 75 லூப்களை முடித்த பெல்ஜியத்தைச் சேர்ந்த முந்தைய சாதனையாளரை ஃபில் கோர் நினைவு கூர்ந்தார். இறுதி வெற்றியாளராக மாறி, முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடிப்பதை அவர் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை என்று கூறினார்.
இரண்டாவது இடமே உலக சாதனை
ஓடுவது அவரது வாழ்க்கையின் ஒரு அங்கம் என்று கூறுகிறார், மேலும் அவரது அர்ப்பணிப்பும் பயிற்சியும் இந்த கடினமான நிகழ்வில் பலனளித்தன என்றார். அவரோடு தொடர்ந்து 101 சுற்றுகள் வரை ஓடிய சாம் ஹார்வி இரண்டாம் இடத்தை பிடித்ததோடு, 101 சுற்றுகள் எனும், முந்தைய உலக சாதனையை சமன் செய்தார். அந்த சாதனை அக்டோபர் 2022 இல் Merjin Geerts மற்றும் Ivo Steyaert ஆகியோரால் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இவர்களோடு 90 சுற்றுகள் வரை ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்து தேசிய சாதனையை படைத்தார் ஹார்வி லூயிஸ். போட்டியின்போது கடுமையான வானிலை பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சவாலாக இருந்தது, இரவில் வெப்பநிலை -2 டிகிரி செல்சியஸ் மற்றும் பகலில் தோராயமாக 22 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.
சிறப்பாக நடந்து முடிந்த அல்ட்ரா மராத்தான்
டெட் கவ் கல்லி பேக்யார்ட் மாஸ்டர்ஸ் அல்ட்ரா மராத்தான் 2023க்கு முன்னதாக இரண்டு மாதங்கள் குளிர் மழையில் பயிற்சி செய்து பில் கோர் இந்த வெப்பநிலை வேறுபாட்டிற்கு தயாராக இருந்ததாக தெரிவித்தார். ரேஸ் டைரக்டர் டிம் வால்ஷ், பந்தயத்தின் காலம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், ஏனெனில் இது நான்கு நாட்கள் நீடித்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பங்கேற்பாளர்கள் சிறப்பாக செயல்படுவதை அவர் பாராட்டினார். வரும் ஆண்டுகளில் இன்னும் சிலிர்ப்பான காட்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். டெட் கவ் கல்லி பேக்யார்ட் மாஸ்டர்ஸ் அல்ட்ரா மராத்தான் 2023 இல் பில் கோரின் அசாதாரண சாதனை, அல்ட்ராமரத்தான் துறையில் விளையாட்டு வீரர்களின் குறிப்பிடத்தக்க திறன்களை வெளிப்படுத்தும், ஓட்டப்பந்தய சமூகத்தை ஊக்குவிக்கும் என்று தெரிகிறது.