கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து அரையிறுதியில் தோல்வியுற்றார்.


கனடா ஓபன் பேட்மிண்டன்:


கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பேட்மிண்டன் உலக கூட்டமைப்பின் சார்பில் நடப்பாண்டு நடைபெறும் நான்காவது, சூப்பர் 500 தொடர் இதுவாகும். இந்திய அணி சார்பில் பங்கேற்றவர்களில் மகளிர் பிரிவில் நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து மற்றும் ஆடவர் பிரிவில் இளம் வீரரான லக்‌ஷயா சென் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்.


இறுதிப்போட்டியில் லக்‌ஷயா சென்:


இந்நிலையில், உலக தரவரிசையில் 19வது இடத்தில் உள்ள லக்‌ஷயா சென், 11வது இடத்தில் உள்ள ஜப்பானை சேர்ந்த நிஷிமோட்டோவை எதிர்கொண்டார். 44 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-17, 21-14 என்ற நேர் கேம்களில் சென் லக்‌ஷயா வெற்றி பெற்றார். நிஷிமோட்டோ உடனான நேருக்கு நேர் மோதலில் 2-1 என லக்‌ஷயா முன்னிலை பெற்றுள்ளார். கடந்த ஓராண்டில் அவர் எட்டும் முதல் இறுதிப்போட்டி இதுவாகும். முன்னதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற, காமன் வெல்த் தொடரில் தான் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், சீனாவை சேர்ந்த லி ஷிஃபெங்கை எதிர்கொள்கிறார். இவர் நடப்பாண்டு ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரில் சாம்பியன் என்பது  குறிப்பிடத்தக்கது.


சொதப்பிய பி.வி. சிந்து:


மகளிர் பிரிவின் அரையிறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனையான பி.வி. சிந்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 14-21, 15-21 தோல்வியுற்று பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார். சிங்கப்பூர் ஓபன்பேட்மிண்டனை தொடர்ந்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக யமாகுச்சியிடம் சிந்து தோல்விய சந்தித்துள்ளார். 


வெற்றிக்காக போராடும் சிந்து:


கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த சிந்து சிகிச்சைக்குப் பின்பு, கடந்த ஜனவரி மாதம் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார். அதன்பிறகு 11 தொடர்களில் பங்கேற்ற அவர் 3 தொடர்களில் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால், ஒரு தொடரில் கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. கடைசியாக கடந்தாண்டு நடைபெற்ற காமன் வெல்த் தொடரில் தான் அவர் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார். நடப்பாண்டில், மரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸில் இரண்டாம் இடத்தையும், மலேசியா மாஸ்டர்ஸில் மூன்றாவது இடத்தையும் பிடித்தே அவரது சிறப்பான ஆட்டமாக உள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் மற்றும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளில் இந்திய அணி சார்பில் பி.வி. சிந்து மற்றும் லக்‌ஷயா சென் ஆகியோர் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.