20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று முதல் கென்யாவின் நைரோபியில் தொடங்கின. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். அதில் இன்று 4*400 மீட்டர் கலப்பு ரிலே பிரிவில் இந்தியாவின் பிரியா மோகன், சும்மி,பரத் மற்றும் கபில் ஆகியோர் கொண்ட அணி பங்கேற்றது. தகுதிச் சுற்றில் இந்திய அணி 3.23.39 என்ற நேரத்தில் பந்தைய தூரத்தை கடந்து தன்னுடைய ஹீட்ஸில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 


இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஓடி 3.20.55 என்ற நேரத்தில் ஓடி மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டில் இந்திய அணி ஓடிய சிறப்பான நேரம் இதுவாகும். இதன்மூலம் இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர். 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவிற்கு இது 5ஆவது பதக்கமாகும். இதற்கு முன்பாக இந்த வயது பிரிவு தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் நான்கு பதக்கங்களை இந்தியா வென்று இருந்தது. 






அதாவது 2002ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வட்டு எறிதலில் சீமா அண்டில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். 2014ஆம் ஆண்டு நவ்ஜித் கவுர் தில்லான் வட்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். அதன்பின்னர் 2016 நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு பிறகு 2018ஆம் ஆண்டு மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஹீமா தாஸ் தங்கம் வென்று சாதனை படைத்தார். அதற்குபின் தற்போது இந்திய கலப்பு ரிலே அணி வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. 


முன்னதாக இன்று காலை நடைபெற்ற மற்ற போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தகுதிச் சுற்றில் பிரியா மோகன் 53.79 என்ற நேரத்தில் முடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதேபோல் ஆடவர் குண்டு எறிதலில் அமன்தீப் சிங் தலிவால் 17.92 மீட்டர் தூரம் குண்டு எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் நாளை மாலை 5.50 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். 


மேலும் படிக்க: காவேரி மருத்துவமனை பிராண்ட் அம்பாசிடரானார் தோனி...!