யு-20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பல்கேரியா நாட்டின் சோஃபியா பகுதியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பல்வேறு பிரிவுகளில் வீராங்கனைகள் இடம்பெற்று இருந்தனர். இதில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அந்திம் பங்கால் பங்கேற்றார். இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 


நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அந்திம் பங்கால் கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சகாயாவேயா என்பவரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்ஹ்டை வெளிபடுத்திய அந்திம் 8-0 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் யு-20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். 


 






நிவாஸ் பங்கால் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதிகளுக்கு கடைசி பெண் குழந்தையாக அந்திம் பிறந்தார். அவருக்கு முன்பாக 3 பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தனர். இதன்காரணமாக இவருக்கு அந்திம் என்ற பெயர் வைக்கப்பட்டது. அதாவது இந்தியில் அந்திம் என்றால் கடைசி என்பது பொருள். கடைசி என்ற பெயரை வைத்திருக்கும் அந்திம் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். 


யு-17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அந்திம் பங்கால் வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்று இருந்தார். இதன்காரணமாக அவர் யு-20 பிரிவில் தங்கம் வெல்ல வேண்டும் என்று விரும்பியிருந்தார். இந்தச் சூழலில் தற்போது அவர் அதை நிறைவேற்றியுள்ளார். 


யு-20 உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சோனம் மாலிக் பங்கேற்றார். இவர் அந்தப் பிரிவின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். இறுதிப் போட்டியில் அவர் ஜப்பான வீராங்கனை 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அத்துடன் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். 


இதேபோல மகளிருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ப்ரியங்கா பங்கேற்றார். அவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். இறுதிப் பபோட்டியில் அவர் ஜப்பானின் மஹிரோ யோசிடேக்கை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் ஜப்பான வீராங்கனை யோசிடேக் 8-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை ப்ரியங்காவை வென்றார். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் ப்ரியங்கா வெள்ளிப்பதக்கம் வென்றார். 


மேலும் 72 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரித்திகா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் ஸெயினப்பை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சிதோ வெண்கலப் பதக்கப் போட்டியில் மெல்டாவை 11-5 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் அவரும் இந்தியாவிற்கு ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். மொத்தமாக யு-20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவில் இந்திய அணி ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.